மிராய்- விமர்சனம்

பேரரசன் அசோகர் எழுதி வைத்துச் சென்ற சாகாவரம் கொண்ட நூல்களை வைத்துப் பின்னப்பட்ட பேண்டஸி கதை இந்த மிராய்

1000 ஆண்டுகளுக்கு முன்பு அசோகர் 9 நூல்களில் சாகாவரத்திற்கான ரகசியத்தை எழுதி வைத்து, அந்த 9 புத்தகங்களுக்கு காவலாக 9 பேர்களையும் நியமித்திருக்கிறார். சரியாக ஆயிரம் ஆண்டுகள் கழித்து தீமை ஒன்றையே துணையாகக் கொண்ட வில்லன் மனோஜ் மஞ்சு அந்தப் புத்தகங்களைக் கைப்பற்ற மந்திர வேலைகளைச் செய்கிறார். அதீத சக்திகொண்ட ஹீரோ தேஜா சஜ்ஜா அதை எப்படி முறியடிக்கிறார் என்பதை ஆன்மிகமும் பிரம்மாண்டமும் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் கட்டாம்னெனி

பிரம்மாண்ட நாயகனாக படத்தில் சுற்றிச் சுழல்கிறார் நாயகன் தேஜா சஜ்ஜா. தனக்குள் இருக்கும் சக்தி தெரியாதவரை ஒருமுகமும், தெரிந்தபின் வேறு முகமும் காட்டி நடிப்பில் அசரடித்துள்ளார். வில்லனாக மனோஜ் மஞ்சு அட்டகாசம் செய்துள்ளார். அவரின் ப்ளான்ஸ் ஆட்டிட்யூட் அனைத்துமே ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு, கெட்டப் ஸ்ரீனு உள்ளிட்ட பிற கதாப்பாத்திரங்களும் திரையில் தங்கள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

படத்தின் மற்றொரு ஹீரோவாக உலா வருகிறது விஷுவல்ஸ். ஒளிப்பதிவாளர் வரைகலை அணியினருடன் இணைந்து கச்சிதமான ப்ரேம்களை உருவாக்கி நம் பார்வைக்கு பெரு விருந்தளித்துள்ளார். இசை அமைப்பாளர் கெளரா ஹரி படம் கொடுக்கும் எல்லா உணர்வுகளை மதித்து தரமான பின்னணி இசையை வழங்கியுள்ளார். பாடல்களும் கேட்கும் ராகத்தில் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு

அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பரபரப்போடு திரைக்கதை பயணித்தாலும் எமோஷ்னலிலும் கோட்டை விடவில்லை. எமோஷ்னல் கனெக்டிங்-ஐ பக்காவாக பொருத்தியிருப்பதால் படம் நம்மை தனக்குள் வைத்துக்கொள்கிறது. தியேட்டரை விட்டு வெளிவரும் போது முழு திருப்தியைக் கொடுக்கிறது மிராய். அதனால் முழு நம்பிக்கையோடு தியேட்டருக்குள் செல்லலாம்
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *