மென் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் நல்லிசை இந்த மெல்லிசை
கதையின் நாயகன் கிஷோரின் மகன் மகள் ஆகியோரின் பாயிண்ட் ஆப் வ்யூவிலிருந்து துவங்குகிறது கதை. P.T வாத்தியாராக இருக்கும் கிஷோர் மனைவி மகன் மற்றும் மகளோடு அன்பு நிறைந்த வாழ்வு வாழ்ந்து வருகிறார். P.T வாத்தியாராக இருந்தாலும் நன்றாக பாடும் திறமையுள்ளவர் கிஷோர். அந்த திறமையின் மூலம் டிவி சேனல்களில் பாடி முன்னேற முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்குப் பின்னாலுள்ள வாழ்வும் வலியும் வலிமையும் தான் படத்தின் கதை
செல்ல அப்பாவாக, நல்ல கணவனாக, நட்பு நிறைந்த ஆசானாக, ரசனை மிகுந்த கலைஞனாக கிஷோர் மிகவும் ஈர்க்கிறார். கிஷோரை இப்படி மென்மையாக பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. அவருக்கு நல்லதொரு இணையாக நடித்து அசத்தியுள்ளார் சுபத்ரா. கூடவே ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், ஜாஸ்வன்ட், தனன்யா, ப்ரோக்திவ் என எல்லா நடிகர்களும் இயல்பாக நடித்துள்ளனர்
படத்தில் ஷங்கர் ரங்கராஜனின் இசை நல்ல ரோல்ப்ளே செய்துள்ளது. எல்லா உணர்வுகளையும் கச்சிதமாக கடத்த இசை பேருதவி செய்துள்ளது. ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி தனது தேர்ந்த ஒளிப்பதிவு மூலம் நல்ல விஷுவலை கொடுத்துள்ளார்
15 ஆண்டுகளுக்கு முன்புள்ள ராதாமோகன் படங்களின் சாயலில் படத்தை கவிதை போல நகர்த்தியுள்ளார் இயக்குநர் திரவ். எளிய குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன் மேல் எழுவது அந்தக் குடும்பத்தின் வாரிசுகளுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும்
யெஸ் இந்த மெல்லிசை படம் பார்க்கும் நமக்கும் நம்பிக்கையைத் தருகிறது
4/5
-வெண்பா தமிழ்

