ஒரு எளிய மனிதன் சந்திக்கும் வலி மிகுந்த சம்பவங்கள் தான் மனிதன் தெய்வமாகலாம்
சேலம் ஓமலூர் அருகே ஒரு கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வாழ்கிறார் செல்வராகவன். முதிர் பேச்சுலரான அவருக்கு திருமணம் கை கூடாமல் இருக்கிறது. ஒருவழியாக ஹீரோயின் குஷிரவி அவரை கரம் பிடிக்கிறார். அதன்பின் கடன் வாங்கி தாபா ஒன்றை ஓப்பன் செய்கிறார்கள். வாழ்வு சீராக செல்கிறது. அதே ஊரில் அரசியல் பின்புலத்தோடு ஒரு தொழில் நடத்துகிறார் மைம்கோபி. அவர் செய்யும் சில கொடூரங்கள் செல்வராகவன் வாழ்வில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. எளிய மனிதனான ஹீரோ பெரிய வில்லனை எப்படி டீல் செய்து சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை
கதையின் நாயகனான செல்வராகவன் சோக காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். But எல்லாக் காட்சிகளிலும் சோகமாகவே இருக்கிறார். நாயகி குஷிரவி தரமான நடிப்பை கொடுத்துள்ளார். அவரின் கேரக்டர் வார்ப்பில் தெளிவில்லை என்பது மைனஸ்! நம்ம ப்ரியமுடன் கெளசல்யா ஒரு காட்சியில் பரிதாபத்தை சம்மதிக்கிறார். அவரின் கணவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். மைம்கோபி வழக்கமான வில்லன் ரோலில் வழக்கத்தை விட மிகையாக நடித்துள்ளார்
ஒளிப்பதிவாளர் தனது வேலையைச் செவ்வனே செய்துள்ளார். பின்னணி இசையில் இருக்கும் எனர்ஜி பாடல்களில் இல்லை. என்றாலும் மோசமில்லை
“ஒருபெண்ணுக்கு உடல் ரீதியாக கொடூரம் நடந்தால் அவள் தற்கொலை செய்து கொள்வாள்” என்பது போன்ற அபத்தமான காட்சியை இயக்குநர் டென்னிஸ் எப்படி யோசித்தார் என்றே தெரியவில்லை. துணிவும் எதிர்ப்பும் தானே பெண்ணின் அடிப்படை குணமாக இருக்க வேண்டும். ஒரு கலைப்படைப்பு அதைத்தானே சொல்ல வேண்டும். இந்த ஒரு விசயத்தில் மிகமிக பிற்போக்குத்தனமான படமாக இருக்கிறது. மேலும் கதை ஆரம்பிக்கும் போது இடைவேளையே வந்துவிடுகிறது. அதனால் படத்தோடு ஒட்டமுடியவில்லை. படத்தின் 20 நிமிடத்திலே படத்தின் முடிவு தெரிந்துவிடுவதும் மைனஸ்!
திரைக்கதை தெய்வமாக இல்லா விட்டாலும் ஒரு மனிதராகவாவது இருந்திருக்கலாம்.
அதேநேரம் படத்தில் வாழ்வு சார்ந்த சில பாடங்கள் இருப்பதும் மறுப்பதிற்கில்லை. இன்னும் சின்னச்சின்ன பாசிட்டிவ் அம்சங்களும் படத்தில் இருப்பதால் ஒருமுறை பார்க்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

