மாயாதீதம்- நூல் விமர்சனம்

இந்த வருட புக்பேர்ல ஒரு ஸ்டால்ல நின்ன அக்கா, மாயாதீதம் நாவலை எடுத்தாந்து, “சார் இதை அவசியம் படிங்க” ன்னாங்க. நான் இதுக்கு முன்ன என்.ஸ்ரீராம் புக்ஸ் எதுவுமே படிச்சதில்லை. உடனே வாங்கினேன். 104 Page கொண்ட சின்ன புக் தான்

என்.ஸ்ரீராம்எளிய மனிதர்களின் மனங்களில் ஊடாடி உலவிச் சென்று, அல்லது இந்தக் கதையில் எதோவொரு கேரக்டராக கொஞ்ச காலமேனும் வாழ்ந்து எழுதியிருப்பார் போல. கொங்கு பெல்டின் நிலப்பரப்பை நமக்குள் கடத்தும் போதும் சரி, கதாப்பாத்திரங்களின் வார்த்தைகளை இயல்பாக கோர்த்து தரும் போதும் சரி, நம்மால் கதையை விட்டு விலக முடியாமல் போகும்படி எழுதியுள்ளார். நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரர் என் ஸ்ரீராம்

வேணு என்ற சிறுவனுக்கு பார்வையில் பிரச்சனை. மருத்துவர்கள் கை விரிக்கிறார்கள். கோட்டை “மாரியம்மன் பார்வை கொடுப்பாள்” என்று வேணுவின் சித்தப்பா உறுதிபட நம்புகிறார். கோவிலிலே கிடக்கிறார்கள். அம்மா இல்லாத வேணுவை அப்பாவும் கூட தன் தம்பியிடம் விட்டுச் சென்று விடுகிறார். சித்தாப்பா, சித்தி, அவரகளின் புத்தி சுவாதீனமில்லாத ஒரு மகன் கார்த்தி. இவ்வளவே வேணுவின் உலகம். அடுத்து அவன் வரையும் ஓவியங்களும். பார்வை குறைந்த வேணு எப்படி ஓவியன்? என்ற கேள்விக்கு, எளிய மனிதர்களின் நம்பிக்கையும், மருத்துவம் தாண்டியும் அற்புதங்கள் அரிதாக உண்டு என்பதையும் நாவலில் பதிலாக்கியுள்ளார் என்.ஸ்ரீராம்

இளைஞன் வேணு கல்லூரி முதலாமாண்டு படிக்கும் சமயத்தில் பார்கவி என்ற அவனின் முறைப்பெண், விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட வேணுவின் சித்தியை கவனித்துக் கொள்ள வருகிறாள். பார்கவியின் மனமும் உடலும் வேணுவின் மனமும் உடலும் இடம் மாறிக்கொள்ளும் சூழல் வாய்க்கிறது. அதன்பின் நடக்கும் எமோஷ்னல் ட்ராமாக்கள் எல்லாம் வாசித்து, பார்த்துச் சலித்த சித்திரங்கள் என்றாலும், எளிய மனிதர்களின் மனப்போக்கை அப்படியே பிரதியெடுத்து எழுத்தில் சேர்த்துள்ளது அபாரம்

“காதலும் வாழ்வும் வேறு வேறல்ல” என்ற எண்ணத்தை கொண்டவனிடம், “இரண்டும் வேறு வேறு தான்டா மடையா” என்று காலம் உறுதிபட உணர்த்தி நிற்கும். அப்படி உணர்த்தும் நாட்களை வேணு எப்படி எதிர்கொள்கிறான் என்பதும், பார்கவி எப்படி எதிர்கொண்டாள் என்பதும் மாயாதீதத்தின் அதி முக்கியமான பகுதிகள்

“வாழ்வதற்கு நிறைய இருக்கிறது” என்று கர்வப்பட்டால் காலம் பூஜ்ஜியத்தைப் பரிசளிக்கும். “வாழ்வதற்கு என்ன இருக்கிறது?” என்ற விசனப்பட்டால் காலம் ராஜ்ஜியத்தை கை காட்டும். இந்தக் காலம் எப்போதும் விசித்திரம் நிறைந்த ஒன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *