வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதை மருதம் என்பர் இலக்கியத்தில். பசுமை போர்த்திய இச்சொல்லுக்குள் வாழும் விவசாயிகள் பசுமை நிறைந்து வாழ்கிறார்களா என்பது பெரும் கேள்வி. எத்தனைப் படத்தில் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசினாலும் தீராத வலி கொண்டதாகவே இருக்கிறது உழவனின் வாழ்வு. அப்படியொரு வாழ்வைப் பேசியுள்ள படம் மருதம்
ஹீரோ விதார்த் வேலூர் அருகே இயற்கை விவசாயம் செய்து வருபவர். வயிற்றுக்கும் வாய்க்கும் அல்லோலப்படும் அவரின் வாழ்வில் இடிபோல வந்திறங்கிறான் ஒருவன். அதாவது விதார்த் விவசாயம் செய்யும் நிலத்திற்கு அவர் உரிமையானவர் அல்ல என்கிறான் அவன். இடிந்து போகும் விதார்த் அடுத்தடுத்து என்ன தீர்வை நோக்கி நகர்கிறார் என்பதே மீதிக்கதை
கண்ணியப்பனாக விதார்த் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரின் எளிய தோற்றமும் மிகையற்ற நடிப்பும் வெகுவாக ஈர்க்கிறது. ரக்ஷனா இயல்பான நடிப்பால் அசத்தியுள்ளார். சரியான கேரக்டர்களை அவர் தேர்ந்தெடுத்து பயணித்தால் நிச்சயமாக நல்ல இடத்திற்கு நகர்வார். அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா உள்ளிட்ட பிற நடிகர்களும் மருத நிலத்தில் பச்சைப்பயிர்களாக கவனம் கொள்ள வைக்கிறார்கள்
விவசாய பின்புலம் உள்ள கதை என்பதால் ஒளிப்பதிவில் தன்பலம் முழுவதையும் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருள்.கே சோமசுந்தரம். பின்னணி இசையில் தனது அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.
மாற்றம் என்பது மாறாதது என்பார்கள். நிச்சயமாக விவசாயிகளின் வாழ்விலும் மாற்றமும் ஏற்றமும் வரும் என்ற ஆசை மற்று அக்கறையின் வெளிப்பாடே இந்த மருதம்..சிறப்பான எழுத்தோடு இயக்கத்தையும் கையாண்டு ஒரு நல்ல காட்சியனுபவத்தை வழங்கியுள்ளார் இயக்குநர் V.கஜேந்திரன். வசதி குறைபாடுகள் காரணமாக சின்னச் சின்ன சமரசங்களை நாம் கொள்ள வேண்டியதிருந்தாலும்,இது பார்க்க வேண்டிய படம்..பாராட்ட வேண்டிய படம்
மருதம்- இது நம்ம படம்
3.5/5
-வெண்பா தமிழ்

