ஒரு மனிதரை நிறத்தை வைத்து உளவியல் ரீதியாக காயப்படுத்தினால் அதன் விளைவுகள் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதைச் சொல்கிறது இந்த மார்கன்
படத்தின் துவக்கத்தில் ஒரு கேரக்டரை பின் தொடர்கிறது விஜய் ஆண்டனி டீம். அதன்பின்னணி என்ன என்று கதை பயணிக்கிறது. ஒரு கொடூரமான கொலைக்கான காரணம் அஜய் தீசன் என்று விஜய் ஆண்டனி அஜய் தீசனை கைது செய்து விசாரிக்கிறார். ஆனால் அஜய் தீசன் கொலையை கண்டுபிடிக்கும் ஆளாக ஒரு கட்டத்தில் மாறுகிறார். அப்படியென்றால் உண்மையான கொலையாளி யார் என்ற இஸ்வெஸ்டிகேசனும் ட்விஸ்டும் தான் மீதிப்படம்
மார்கனின் முகமாக விஜய் ஆண்டனி நடிப்பு இருந்தாலும், கதையின் ஆத்மாவாக நடித்துள்ளார் அறிமுக நடிகர் அஜய் தீசன். பிரிகிடா கொடுத்த வேலையைச் செய்துள்ளார். சமுத்திரக்கனியை ஒருமணிநேர கால்ஷீட்டிற்கும், வினோத் சாகரை ஒருநாள் கால்ஷீட்டிலும் அழைத்திருப்பார்கள் போல. படத்தின் முக்கியமான திருப்புமுனையில் வரும் ஒருபெண் கேரக்டர் நடிப்பிலும் பார்வையிலும் அதகளப்படுத்தியுள்ளார். அவரைக் குறிப்பிடுவது படத்தின் ட்விஸ்டை உடைப்பதாக இருக்கும் என்பதால் விட்டுவிடலாம்
படத்தில் இசை ஒரு கதை சொல்லியாக படம் முழுதும் பயணிக்கிறது. தானொரு சிறந்த இசைஞர் என்பதை விஜய் ஆண்டனி மீண்டும் நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு ஹீரோ. கலர்பேலட் முதற்கொண்டு விஷுவலில் நிறைய புதுமையைச் செய்துள்ளனர். அது பார்ப்பதற்கு அவ்வளவு பிரஷ்-ஆக இருக்கிறது
படத்தின் துவக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், 20 நிமிடங்களுக்குப் பின் நடக்கும் சம்பவங்கள் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. படம் பேசியிருக்கும் உளவியல் வன்முறை குறித்த புரிதல் மிக முக்கியமானது. கேரக்டர்களுக்கான ரைட்டிங்கில் சில பேண்டஸி போன்ற விசயங்கள் சற்று பொருந்தாத் தன்மையை ஏற்படுத்துகிறது. மிகச்சிறப்பாக வந்திருக்க வேண்டிய சில எமோஷ்னல் காட்சிகள் சுமாராக மாறியதற்கு அது ஒரு காரணம். மேலும் ஹீரோ கேரக்டர் சப்போட்டிங் கேரக்டருக்கு சப்போர்ட்டாக இருப்பதும் ஒரு மைனஸ். சிற்சில குறைகள் இருக்கிறது தான். But முற்றாக தவிர்க்க முடியாத படமாகவும் மார்கன் இருக்கிறது என்பதே நிஜம்
3/5
-வெண்பா தமிழ்

