லவ் மேரேஜ்- விமர்சனம்

கல்யாணத்தை முன்வைத்து முப்பது ப்ளஸ் வயதுகொண்ட ஹீரோவுக்கு நடக்கும் இம்சைகளும் தீர்வுகளுமே படம்

மதுரையிலிருந்து கோபிச்செட்டிப்பாளையம் செல்கிறார்கள் ஹீரோ விக்ரம் பிரபு குடும்பத்தினர். அங்கு அவருக்காக பார்த்து வைத்திருக்கும் பெண்ணை நிச்சயம் செய்யப்போகிறார்கள். கதை நடப்பது 2020 ஆகையால் இவர்கள் நிச்சயம் செய்த நேரத்தில் லாக்டவுன் வருகிறது. மேலும் விக்ரம் பிரபுவிற்கு நிச்சயம் செய்த பெண் ஓடிப்போகிறார். அதன்பின் நடக்கும் விசயங்கள் என்ன.. விக்ரம் பிரபுவிற்கு திருமணம் எப்படி நடந்தது என்பதே படத்தின் கதை

விக்ரம் பிரபு 33 வயது முரட்டு சிங்கிள் இளைஞனின் உடல்மொழி முகமொழியை நடிப்பில் கொண்டு வந்துள்ளார். சிற்சில எமோஷ்னல் காட்சிகளில் இன்னுமே அழுத்தமான முத்திரையை அவர் பதித்திருக்கலாம். சுஷ்மிதா பட் அழகாகவும் அமைதியாகவும் நடித்து ரசிகர்களின் ஈர்ப்பைச் சம்பாதிக்கிறார். மீனாட்சி தினேஷ் இரண்டாம் பாதி படத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளார். சத்யராஜ் வரும் ஒரு காட்சிக்கு தியேட்டரில் கைத்தட்டல் நிச்சயம். ரமேஷ்திலக், கஜராஜ், கோடாங்கி வேல்முருகன் உள்பட பலரும் ஸ்கோர் செய்கிறார்கள். குறிப்பாக அருள்தாஸ் அட்டகாசமாக நடித்துள்ளார்

ஷான் ரோல்டன் பாடல்களில் கவனிக்க வைத்துள்ளார். பின்னணி இசை 90 காலகட்ட இசையை நினைவூட்டுகிறது. மதன் கிறிஸ்டோபர் தனது அழகான ஒளிப்பதிவை செய்து படத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். பரத் விக்ரமனின் கச்சிதமான எடிட்டிங் படத்திற்கு பெரும்பலம். கலை இயக்குநர் முரளி படத்திற்கு தரமான பங்களிப்பைச் செய்துள்ளார்

சின்ன கதை என்பதை முதலிலே சொல்லி விடுவதால் நாமும் பெரிய எதிர்பார்ப்பின்றி படத்திற்குள் ஐக்கியமாகி விடுகிறோம். அதுவே படத்தின் இரண்டாம் பாதி தொய்வை காப்பாற்றுகிறது. லாக்டவுன், சத்யராஜ் என்ட்ரி உள்பட சிற்சில ஐடியாக்கள் க்யூட். ஜாதி குறித்த பார்வை, பெண் குழந்தைகள் பிறப்பிற்கு அலட்டிக்கொள்ளும் போக்கை கண்டித்தது என சில இடங்களில் இயக்குநர் சண்முகப்பிரியன் பொறுப்போடு படத்தை அணுகியுள்ளார்.

குட்டி குட்டி குறைகள் இருந்தாலும், இந்த வார இறுதியை குடும்பத்தோடு கண்டு மகிழ குறைந்தபட்ச உத்திரவாதம் தருகிறது லவ் மேரேஜ்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *