இந்த கொம்புசீவி சண்முக பாண்டியனுக்கு வெற்றி முகமா?
1959 கால கட்டத்தில் வைகை அணை கட்டும் போது சில கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன. அந்தக் கிராம மக்களில் ஒருவரான சரத்குமார் ஊரின் கம்பீரத் தலைக்கட்டு. சிறு வயதிலே அப்பா அம்மாவை இழந்த சண்முக பாண்டியனை சரத்குமார் வளர்த்து ஆளாக்குகிறார். காலம் கொஞ்சம் கடக்க, சரத்குமாரும், சண்முக பாண்டியனும் கஞ்சா தொழில் செய்கிறார்கள். போலீஸை எல்லாம் தங்கள் கன்ட்ரோலில் வைத்திருக்கிறார்கள். இச்சூழலில் அவ்வூருக்கு புதிய இன்ஸ்பெக்டராக வருகிறார் நாயகி தாரணிகா. அவரைக் கண்டதும் காதலாகிறார் நம் ஹீரோ. தாரணிகா காதலில் விழுந்தாரா.. கஞ்சா கடத்தியவர்களை பிடித்தாரா? என்பதாகவும், பின்பாதியில் பெரும் கடத்தலை நிகழ்த்துவதில் சரத்குமார் சண்முகபாண்டியன் கூட்டணி ஜெயித்ததா என்பதாக படம் நகர்கிறது
கதையின் நாயகனாக சண்முக பாண்டியன் கம்பீரமாக இருக்கிறார். உடலளவில் தேறும் சண்முகபாண்டியன் நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெறவேண்டும். கதாநாயகன் போல் வலம் வருவது சரத்குமார் தான். இளம் வயது சரத்குமாரன், முதிய வயது சரத்குமார் என இரு தோற்றத்திலும் அசத்தியுள்ளார். தாரணிகா மிடுக்கான இன்ஸ்பெக்டர் தோற்றத்தை விட அழகான சேலையைக் கட்டி வரும் தோற்றத்தில் சிறப்பாக இருக்கிறார். கல்கி ஒருசில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார். முனிஷ்காந்த் கவனம் ஈர்க்கிறார். பூண்டு கம்பெனி முதலாளியாக வருபவர் ஒரு காட்சி என்றாலும் அசத்தியுள்ளார்
யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்கள் எல்லாம் ஒகே ரகம். பின்னணி இசை நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. தேனி, மதுரை, உசிலம்பட்டி ஆகிய ஏரியாக்களை சிறப்பாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
படத்தின் மெயின் கேரக்டர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் தொழிலைச் செய்வதால், அவர்கள் செய்யும் நியாயங்கள் எல்லாம் அநியாயமாகவே தெரிகிறது. வரலாற்றுப் பின்னணியில் கதையை இயக்குநர் பொன்ராம் வலுவாகப் பிடித்திருந்தாலும், வலுவில்லாத திரைக்கதையால் ஆங்காங்கே படத்தை கோட்டைவிட்டுள்ளார். காதல் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை. கேரக்டர்களுக்கான ரைட்டிங்கில் உயிரோட்டமும், திரைக்கதையில் இன்ட்ரெஸ்டிங்கையும் சேர்த்திருக்கலாம். பின்பாதியில் வரும் சில காமெடி காட்சிகள் மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது
2.75/5
-வெண்பா தமிழ்

