நாயகன் இயக்குநர் ஈகோ யுத்தமும், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலையும் விசாரணையும் தான் காந்தா
துல்கர் சல்மான் காந்தா என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை இயக்குவது சமுத்திரக்கனி. துல்கர் பிரபலமான ஹீரோவாக இருந்தாலும், அவரை உருவாக்கியவர் சமுத்திரக்கனி. அதனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் துல்கர் சொல்லும் கரக்ஷன்களை சமுத்திரக்கனி ஏற்க மறுக்கிறார். இருவருக்கும் ஈகோ யுத்தம் உருவாகிறது. மேலும் துல்கரும் நாயகி பாக்யஸ்ரீயும் காதலில் விழுகிறார்கள். அடுத்த அதிர்ச்சியாக ஒரு கொலை நடக்கிறது. இவர்களின் ஈகோ யுத்தத்திற்கும் நடந்த கொலைக்கும் சம்பந்தம் உண்டா என விசாரிக்க இன்ஸ்பெக்டர் ராணா வருகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே காந்தாவின் கதை
ஹீரோ துல்கர் சல்மானுக்கு இது விருது மெட்டிரியல் படம். மனிதர் பின்னியெடுத்துள்ளார். நெஞ்சில் முளைக்கும் ஈகோவை கண்களிலும் முகத்திலும் காட்டி முத்திரைப் பதித்துள்ளார். சமுத்திரக்கனியும் சற்றும் சளைக்காமல் அசத்தியுள்ளார். ராணா மிகையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் ஒகே என சொல்ல வைக்கிறார். “யார்றா இந்தப் பொண்ணு?” என கேட்கும் வகையில் அசத்தியுள்ளார் பாக்யஸ்ரீ
படத்தின் கருப்பு வெள்ளை காட்சிகளை துருத்தாமல் படம் பிடித்து கண்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் டேனி சஞ்சஸ் லோபஸ். ஜானு சுந்தரின் இசையில் பாடல்கள் ஓகேவாக இருந்தாலும், பின்னணி இசை வேறலெவலில் அமைந்துள்ளது. டெக்னிக்கல் டீமில் மகுடம் சூடும் கலைஞராக இருப்பது ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் தான். பேருழைப்புக் கொட்டி நம்மை அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறார். பிசிறு தட்டாத செட் வொர்க்! தமிழ்பிரபாவின் தமிழ் வசனங்களும் தூள்
ஈகோ யுத்தத்தில் துவங்கி, கொலை விசாரணை என படம் ட்ராக் மாறினாலும் சோடை போகாத திரைக்கதையால் ஆறுதல் அளித்துள்ளார் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். மிக மெதுவாக நகரும் காட்சிகளும், மிகையான நடிப்பைக் கொட்டும் சில நடிகர்களும் படத்தின் மைனஸாக இருந்தாலும், ஆகத்தரமான மேக்கிங் படத்தை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது
3/5
-வெண்பா தமிழ்

