கம்பி கட்ன கதை- விமர்சனம்

கோகினூர் வைரத்தை யார் வச்சிருக்கா? என்ற ஒருலைனை ஒரு கதையாக கட்டியிருக்கிறார்கள்

சதுரங்கவேட்டை படத்தில் செய்த வேலையை இப்படத்தில் செய்கிறார் ஹீரோ நட்டி. அடிப்பதெல்லாம் கொள்ளை. அதுவொன்றே கொள்கை என வாழ்கிறார் . கோகினூர் வைரம் ஒன்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா வருவதை அறிந்த நட்டி அதை ஆட்டையப்போட திட்டம் தீட்டுகிறார். அந்தத் திட்டம் நூலிழையில் சொதப்ப, கம்பி எண்ணும் சூழலுக்குள் விழுகிறார். பின் மீண்டெழும் நட்டி சாமியார் வேசம் போட்டு ஆசிரமம் நடத்தியபடியே வைரத்தை தேடுகிறார். அந்தத் தேடுதல் பயணத்தில் நடக்கும் ஆசிரம காமெடி தான் மொத்தப்படமும்

இடது கையால் கையாளும் கேரக்டர். என்பதால் நட்டி அசத்தியுள்ளார். சாமியார் வேசம் கட்டி அவர் அடிக்கும் லூட்டி எல்லாம் ஓவர்டைம் டூட்டி. அவரின் அசிஸ்டெண்ட் சண்முகமாக வந்து அட்ராசிட்டி செய்து கலக்கியுள்ளார் சிங்கம் புலி. ஜாவா சுந்தரேசன் அடிக்கும் சில பன்ச்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. கோதண்டம் கிடைத்த சின்ன ரோலில் கவனம் ஈர்த்துள்ளார்.

சதிஷ் செல்வம் ஒரு காமெடி படத்திற்கு தேவையான பின்னணி இசையை வழங்கியுள்ளார். கொடுத்த பட்ஜெட்டில் கிடைத்த செட்-ஐ வைத்து படத்தை அழகாக காட்ட முயற்சித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ். காமெடிக்கு உத்திரவாதம் தரவேண்டுமென வசனத்தை ரசித்து ரசித்து எழுதியுள்ளார் முருகானந்தம். படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார்.

படம் துவங்கிய அரை மணி நேரம் படம் மீதான எதிர்பார்ப்பு கூடுகிறது. ராஜநாதன் பெரிய சாமியின் இயக்கம் அந்தளவிற்கு படத்தின் திரைக்கதையும் மேக்கிங்கும் அமைந்துள்ளது. அதன்பிறகு படம் மிக மெதுவாக நகர்கிறது. சிற்சில காமெடி எபிசோட்கள் ரிப்பீட் அடிப்பதும் சோகம். பின்பாதியில் முழுக்க முழுக்க காமெடி மட்டுமே நிறைந்திருக்கும் படி பார்த்துக்கொண்டது படத்திற்கு பெரிய ப்ளஸ். பல கேள்விகள் படம் பார்க்கும் போதே எழுந்தாலும், சில இடங்களில் விழுந்து சிரிக்க வைத்த வகையில் இந்தக் கம்பி கட்ன கதைக்கு நாம் நம்பி நடையைக் கட்டலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *