எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம்- நூல் விமர்சனம்!

அய்யா அப்துல் ஜப்பார் அவர்களின் “அழைத்தார் பிரபாகரன்” என்ற நூலை ஏற்கெனவே வாசித்திருந்தேன். நண்பர் தினேஷ்ராமின் யூட்யூப் சேனலில் அந்த நூலுக்கு ஒரு வீடியோ விமர்சனமும் செய்திருந்தேன். அந்த நூல் போலவே இந்த நூலையும் நண்பர் தினேஷ் தான் கொண்டுவந்து தந்தார்.

அய்யா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு தான் மொத்த புத்தகமும். ஆனால் நாம் வாழ்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கச்சாப்பொருள் நூலெங்கும் கொட்டிக்கிடக்கிறது. அய்யா அவர்களின் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் எதையும் வலிந்து திணித்து எழுதவே மாட்டார். அதை அழைத்தார் பிரபாகரன் நூலில் நன்கு உணரலாம். எக்ஸ்ட்ரா ஒரு புள்ளிகூட அவர் எழுத்தில் இருக்காது.

“நாளைக்கு இந்த எடத்துக்குப் போயிருங்க.. இந்தந்த சம்பவம்லாம் நடக்கும்” என்பதை ஒரு ஆள் ஒரு பத்தியில் சொல்லிவிட்டால், அடுத்த நாள் அவர் அங்கு போனார் என்பது மட்டுமே இருக்கும். நடந்த சம்பவங்கள் இருக்காது. அதைத்தான் முன்பத்தியிலே இன்னொருவர் சொல்லிவிட்டாரே என்று கத்திரி போட்டிருப்பார் அய்யா. “கூறியது கூறல்” என்ற குற்றத்தை கிஞ்சித்தும் செய்யாத எழுத்து அய்யா அவர்களின் எழுத்து

இறை நம்பிக்கையும் ஒழுக்கமும் நேர்மையுமே அப்துல் ஜப்பார் அய்யாவின் வாழ்வு🤍 அவர் வாழ்வில் வென்றவர் மட்டுமல்ல..வாழ்வையும் வென்றவர்.. மறுமைநாளில் அல்லா அவரை மகத்தான இடத்தில் வைப்பார்… இன்ஷா அல்லா🙏🙏

இந்த நூலை அய்யா அவர்களின் புதல்வர் பாசத்துக்குரிய ஆசீப்மீரான் அண்ணாச்சி சிறப்பாக தொகுத்திருக்கிறார். நூலுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் அண்ணன் யுகபாரதி அவர்களின் அணிந்துரை.

அணிந்துரையில் அய்யா அவர்களின் அழைத்தார் பிரபாகரன் நூலிலுள்ள ஒரு
வாக்கியத்தை யுக்பாரதி அண்ணன் குறிப்பிட்டிருந்தார். அது கவனத்தை ஈர்த்தது. “லாபநோக்கு என்பது மனிதனின் அடிப்படை குணம். முற்றும் துறந்த முனிவருக்கு கூட முக்தி என்கிற லாப நோக்கு உண்டு” அட!

அய்யா அவர்களின் அமெரிக்கப் பயணம் குறித்த பகுதி மிகச் சிறப்பாக இருந்தது. வழக்கமான பயண நூலின் சாரமில்லாமல், நம் வீட்டில் ஒருவர் அமெரிக்கா சென்று வந்த மனநிலையை வாசிப்பவருக்குத் தந்துவிடுகிறார். ஹஜ் பயணம் குறித்த கட்டுரையில் ஒரு விசயம் நெஞ்சை அசைத்துப்போட்டது. ஹஜ் யாத்திரை செல்பவர்கள் பகையாளியாக இருப்பவரிடமும், நாம் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு பயணம் மேற்கொள்ள வேண்டுமாம். “வம்போர்க்கும் ஈந்திரு..வழிபோவோர்க்கும் ஈந்திரு நீ” என்ற அய்யாவின் வாசகம் எனக்கு நினைவில் வந்தது

“உழைப்பதில் எறும்பு, உண்மையை விரும்பு” என்ற அவரது வாழ்க்கை இளம் தலைமுறைக்கு அற்புதமான வழிகாட்டுதல்!

நூலில் இறுதியில் ஒரு வாக்கியம்

“இறைவனை வணங்கி வாழுங்கள், ஏழைகளுக்கு இரங்கி வாழுங்கள், எல்லாரிடமும் இணங்கி வாழுங்கள்”

Love it🤍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *