அய்யா அவதாரம் & அய்யா அருளிய துவையல் தவம்- நூல் விமர்சனம்!

“வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா” என்பது அய்யா வைகுண்டரின் மொழி. அய்யாவின் அறம் சார்ந்த, அருள் நிறைந்த கருத்துக்களை பிறருக்குச் சொல்வதும்,பிறர் சொல்ல கேட்பதும் நல்லூழ் பெரும் வழியாகும்..

ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பை அள்ளித்தரும் திருமதி லட்சுமி அக்காவும், அய்யா வழியே விதி, அவர் பணியே கெதியென வாழும் திரு கிருஷ்ணமணி அய்யா அவர்களும் இந்நூலை எழுதியிருக்கின்றனர்

இருவருக்கும் முதலில் நல் வாழ்த்துகள்.

அய்யா வைகுண்டரின் அவதார வரலாற்றையும், அய்யா தன் மக்களுக்கு தவமிருந்து வழிபடும் முறையைச் சொல்லிக் கொடுத்த, “துவையல் தவசு” என்ற பகுதியையும் மற்றும் திருத்தணியில் அமைந்துள்ள தணிகைப்பதி உருவான வரலாற்றையும் இருவரும் மிக அழகாக எழுதியிருக்கிறார்கள்

அய்யாவின் அவதாரத்தைப் பற்றிப் பேசும் போது இருவேறு கருத்துக்கள் நிலவுவதுண்டு. அய்யா வைகுண்டர் மனிதராக பிறந்து இறை நிலையை அடைந்தாரா? இறைவனான அவர் மனிதப்பிறவி எடுத்தாரா? என்பதைப் பற்றிய விவாதம் நிறைய நடைபெறுகிறது..
அதற்கான காரணமும் இருக்கிறது. மனித நிலையில் இருந்து அவர் ஆற்றிய அறங்களும், சந்தித்த ரணங்களும், பக்தி மற்றும் பகுத்தறிவால் அவர் வென்றெடுத்த மனங்களுமே அதற்கான காரணம் எனச் சொல்லமுடியும்

இந்து மதத்தின் ஓர் அங்கம் அய்யாவழி என்று கொள்ளும் போது, அய்யாவின் கருத்துக்கள் பெரும்பாலும் இந்துமத தர்மங்களுக்கு நேர் எதிரானவை. “காணிக்கை வாங்கக்கூடாது.. காவடி தூக்கக்கூடாது… உருவ வழிபாடு கூடாது, கோவில்கள் கட்டி குருபூஜை செய்யக்கூடாது, ஆரத்தி கூடாது, வர்ணபேதம் பார்க்கக்கூடாது, என நிறைய கருத்துக்கள் இந்து மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதே நேரம் இந்துப் புராணங்களின் நீட்சியாகவே அய்யா அவதாரமும் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாது…

அய்யாவின் அகிலத்திரட்டு ஆகமத்தில், ஆதி நாரயணரின் அவதாரங்களின் வரிசைகளையும், அவதார நோக்கத்தையும் பட்டியலிட்டு, அதன்பின்னால் வைகுண்டர் அவதாரத்தைப் பற்றியும் உள்ளது. இந்த அகிலத்திரட்டு எழுதப்படிக்கத் தெரியாத அரிகோபாலன் எனும் சீடர் மூலமாக அய்யாவே எழுதியது. அய்யா அவதாரத்தை இந்து மதத்தின் மற்றோர் வடிவம் என்றும் பார்க்கலாம், இந்து மதத்திற்கு மாற்று வடிவம் என்றும் பார்க்கலாம்.

ஏனெனில், ” நாரணர் வைகுண்டமாய் நாட்டினில் வந்த அன்றே
காரணம் எல்லாமாச்சு கலியுகம் அழிந்து போச்சு
பூரண வேதநூலும் புராணமுன் ஆகமங்கள்
சாரமும் கெட்டுப்போச்சு
சதாசிவம் வைகுண்டமாச்சு” என்கிறது அகிலத்திரட்டு..

அய்யாவழிக்கு இந்துமதம் மூலம் என்றாலும், இந்து மதம் வகுத்துள்ள கொள்கைகள் எதுவும் அய்யாவழியில் செல்லுபடியில்லை என்பதை மேற்சொல்லியிருக்கும் அய்யாமொழியே சாட்சியாக இருக்கிறது..

அய்யாவழியை ஒருவர் எப்படி ஏற்றுக்கொள்கிறாரோ, அந்த ஏற்றுக்கொள்ளலின் வழிநின்று அவர்களை ஏற்றுக்கொள்பவர் அய்யா வைகுண்டர்..

புறக்கணிப்புகளை எதிர்த்து உருவானவர் புறக்கணிப்பு செய்யமாட்டார் அல்லவா!! . எல்லோரையும் நல்லவரென ஏற்றுக்கொள்ளும் அதியன்பு அதிசயம் அய்யா வைகுண்டர்

“அவரவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதாக இருந்து விளையாடினேன்” என்பதும் அய்யா வாக்கு

அய்யாவழியில் இருவேறு கருத்துள்ள அன்பர்கள் கூட, “அன்பு பொறுமை, தர்மம்” என்ற அய்யாவின் அற்புதமான இந்தக் கொள்கைகளைப் போற்றி நிற்பவர்கள் என்பதே அய்யாவழியினரின் சிறப்பம்சம்

இந்த நூல் பற்றி பேசலாம்

லட்சுமி அக்காவும் கிருஷ்ணமணி அய்யாவும் இந்த நூலில் கோர்த்துள்ள வார்த்தைகளை வாசிக்கும் போது அவ்வளவு மகிழ்வாக இருக்கிறது..

அகிலத்திரட்டு அனைத்தையும் உள்ளடக்கியது என்பார் மறைந்த மணிபாரதி அய்யா. “பாண்டவர் தமக்காய் தோன்றி பகைதனை முடித்த மாயோன்” என்ற ஒருவரியில் மகாபாரதம் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டிருக்கும் என்று ஒருமுறை மணிபாரதி அய்யா சொன்னது நினைவில் நிற்கிறது. அகிலத்திரட்டு குரான், பைபிள், கீதை போல ஒரே கொள்கையை மட்டும் தொக்கி நிற்காமல், இவை அனைத்தையும் ஒன்றாக்கி நிற்கிறது.

இந்த நூலில், மேலும் அகிலத்திரட்டில் சித்தர்களின் கருத்துக்களும் அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள். முக்கியமாக தவம் பற்றி அய்யாவின் அகிலத்திரட்டுப் பேசும்போது, “உச்சிச்சுழி, மூக்குச்சுழி, முச்சுழி, மேலக்கால் மண்டபம், அகங்காணும் பாந்தள்” ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதை இடமறிந்து பயன்படுத்தி அசத்தியுள்ளனர்

ஒரு தெய்வவழிபாடே மனதில் உறுதியை அதிகப்படுத்தும் என்பது அய்யா உரைக்கும் கருத்துக்களில் ஒன்று. அதை நூலில், “வழிபடும் தெய்வங்களின் எண்ணிக்கை மனதில் அதிகமாகும் போது நம்பிக்கையின் ஆழம் குறைந்து விடுவது இயல்பு” என்று எழுதியிருக்கிறார்கள். எவ்வளவு நயமான வார்த்தைகளால் அய்யா மொழியை பறை சாற்றுகிறார்கள்!! வெல்டன்

சாதிக்கு கடவுள் என்பதை அய்யா அறவே எதிர்த்து நிற்கிறார் என்பதையும் மிக அழகாக வலியுறுத்தியுள்ளது இந்நூல்.

“சிராமன் பிறப்பதென்றால் நம் பிராமண குலத்தில் அல்லவா பிறப்பான். சாணார் குலத்தில் எப்படி பிறப்பான்?” என்று திருவிதாங்கூர் மன்னனின் கேள்விக்கு, “எவ்விடமும் தானாய் மேவியிருப்பவர்க்கு எந்தச் சாதி?” என்று ஒரு மந்திரி பதில் சொல்வார்..

13- ஆம் நூற்றாண்டில் வணிகத்தில் ஓர் இனம் கொடி கட்டிப்பறக்கிறது. அப்போது திருமலை நாயக்கர்கள் மதுரையை வெற்றிகொள்ளும் போது, அந்த வணிக இனத்தை வரிகளால் இம்சிக்கிறார்கள். அதன் நீட்சியே 190 வருடங்களுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் நிகழ்கிறது. உழைப்பால் உயர்பவனை, சாதியால் கீழ்நிலைப்படுத்தும் போது, அவனின் மனநிலை சமநிலை இழக்கும். அதன்மூலம் ஏற்படும் உளவியல் வீழ்ச்சி இனத்தின் வாழ்வையே நரகமாக்கும். இதை மேல்தட்டு வர்க்கம் அன்று செய்தது. இன்றும் செய்கிறது. “எளியோரைக் கண்டு இகழாதே..வலியோரைக் கண்டு மகிழாதே” என்ற வைகுண்டப்பரம் பொருளின் கூற்றுக்கு நியாயம் சேர்த்துள்ளது நூலில் உள்ள சில பக்கங்கள். 13-ஆம் நூற்றாண்டுத் தகவல்கள் மிகவும் புதியதாக இருந்தது

அய்யாவழி மக்கள் அனைவரும் அகிலத்திரட்டு வாசிக்க வேண்டும் என்ற ஆவலை இந்நூல் ஏற்படுத்துகிறது. இது ஒரு தனிமனிதரின் கதை என்றெண்ண வேண்டாம். நிச்சயமாக இது கடவுளின் கதை.

“தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்கு
கர்மக்கலியில் கடவுளார் வந்த கதை” – அய்யா வைகுண்டர்

அந்தக் கடவுள் முதலில் கடவுளாக வந்தானா? மனிதனாக வந்து கடவுள் ஆனானா? என்று குழம்பத் தேவை இல்லை..

இந்நூலில் லட்சுமி அக்கா கிருஷ்ணமணி அய்யா சொல்லியிருப்பதைப் போல, “குழப்பத்தில் முடிவு எடுக்க வேண்டாம். குழப்பத்திற்கு முடிவு கட்டுவோம்”

அய்யாவின் அவதாரத்தை நயம்பட எழுதியிருப்பதைப் போலவே துவையல் தவசு பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.

“குறிப்பிட்ட இன மக்களுக்கு ஆலயத்திற்குள் நுழையத்தடை” என்ற காலத்தில் அய்யா வைகுண்டர் தன் மக்களுக்கென வழிபாட்டு நெறிகளை கற்றுக்கொடுத்தார். கடற்கரை ஓரத்தில் மூன்று நேரம் குளித்து ஒருநேரம் அன்னமருந்தி மக்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற மந்திரத்தை நித்தமும் கூறினார்கள். மேலும் உச்சிப்பாட்டு அகண்ட நாமம் ஆகியவற்றைப் பாடவைத்து புதிய வழிபாடுகளை அய்யா மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். இருந்த அனைத்தையும் துறந்து அய்யாவோடு தவம் செய்யப்போன மக்களுக்கு தவகாலம் முடிந்தபின் ஏற்கெனவே இருந்த பொருட்களுக்கும் மேலாக அய்யா திருப்பிக் கொடுத்தார் என்பது அருள் வரலாறு. தவங்கள் வரங்களாகும் என்பது தானே நியதி! அந்தத் துவையல் தவத்தில் நாமும் பங்கேற்ற உணர்வைத் தந்துள்ளது துவையல் தவம் பற்றியப் பகுதியின் எழுத்து நடை

மேலும் திருத்தணியில் அமைந்துள்ள தணிகைப்பதியின் வரலாற்றையும் ரத்தினச்சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். காஞ்சிபுரத்தில் எப்படி அய்யாபதி திருமதி பார்வதியம்மாள் மூலம் உருவாகி, சிவகுரு அய்யா மூலம் பெரிதாகி, மேலும் அன்பர்களால் வளர்ந்து வருகிறதோ..அதேபோல் திருத்தணி அய்யா பதியும் வளர்ந்து வருகிறது. சரவணன் அய்யா உள்பட நிறைய அன்புள்ளங்கள் அய்யா அருளால் பதியை அழகாக வழி நடத்துகிறார்கள். இந்தப்பதிக்கு வரும் மக்களை மூன்று வருடங்களாக நேரில் சென்று பார்க்கிறேன். நால்மறை வேதம், நாயகன் பாதம் என எந்தப் புராணச் சங்கதிகளையும் அறியாத மக்கள். அவர்கள் நம்பவது அன்பையும் தர்மத்தையும் தான். அவ்விரண்டும் திருத்தணி பதியில் கிடைப்பதால் அம்மக்கள் மனதில் ஒரு நெகிழ்ச்சி குடியிருக்கிறது. நித்தமும் கூலி வேலைக்குச் சென்றால் தான் உணவு என்ற நிலையில் உள்ள மக்களே அங்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் செய்யும் தர்மத்தால் தான் அந்தத் தணிகைப்பதி தன்னிகரற்று விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் எமது அய்யா பதிக்கும் திருத்தணி அய்யா பதிக்கும் தொப்புள்கொடி உறவு போல அன்புக்கொடி உறவு உண்டு என்பதால் தணிகைப்பதி வரலாற்றை வாசிக்கையில் உள்ளம் நெகிழ்ந்தது.

இந்தச்சிறிய நூலுக்குள், அகிலத்திரட்டின் சாரம்சத்தை அரிய தகவல்களுடன் தந்து, துவையல் தவசு, திருத்தணி தணிகைப்பதி வரலாறு ஆகியவற்றையும் இணைத்து இதயத்திற்கு நெருக்கமான நூலாக்கிய திருமதி லட்சுமி அக்கா, திரு கிருஷ்ணமணி அய்யா இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏❤️

“தினமொரு நேரமெந்தன் திருமொழி அதனை கேட்டால்
பனிவெள்ளம் போல பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்” – அய்யா வைகுண்டர்🙏🙏❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *