ஹோமரின் இலியட்- நூல் விமர்சனம்!

எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கியப் பேருரைகள் புதியதலைமுறை வாசகர்களுக்கு நல்லதொரு இலக்கிய வாசல். அவரது ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ உரையை ஒருமுறை கேட்டுள்ளேன். அவரின் இலியட் குறித்த உரை கேட்க ஆசை.

அதை இதோ இந்த புத்தகம் மூலமாக தீர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் ஓடிஸி படம் பார்க்கும் போது நிறைய புரியவில்லை. எஸ்.ராவின் இந்த நூலை வாசித்தபின் ஓடிஸி நன்றாக புரிகிறது. ஏனென்றால் ஹோமரின் ஓடிஸிக்கு முந்தைய கதை இந்த இலியட். இலியட் காவியத்தை மகாபாரதத்தோடு ஒப்பிட்டு நிறைய சான்றுகளையும் தருகிறார் எஸ்.ரா. குறிப்பாக இலியட்டின் நாயகன் அக்கிலிஸை கர்ணனோடு ஒப்பிட்டுள்ளார். காரணம் கதையில் இருக்கிறது. உலகப்புகழ் பெற்ற மாபெரும் இதிகாசங்களில் எல்லாம் பெண்களே கருப்பொருள். ராமாயணத்தில் சீதை, மகாபாரதத்தில் பாஞ்சாலி, இதோ இந்த இலியட்டில் ஹெலன்!

/மெனலெஸ் மனைவி ஹெலன். அவளின் பேரழகில் மயங்கும் பாரிஸ் அவளை காதலித்து கைப்பிடித்து தனது டிராய் நகருக்கு கொண்டுவந்து விடுகிறான். கோபத்தில் வெகுண்டெழுகிறான் மெனலெஸ். அவன் தனது அண்ணன் அகமெனானிடம் சொல்லி டிராய் மீது படையெடுக்கச் சொல்கிறான்/செல்கிறான். மெனலெஸ் தேசத்தின் தளபதி தான் அக்கிலிஸ். அவன் தான் இந்தக் கதையின் நாயகன். ஹெலனுக்கான இந்தப் போர் பத்தாண்டுகள் நடக்கிறது. போரின் இடைவெளியில் மகாபாரதத்தில் கர்ணனுக்கு நேரும் அவமானத்தை போல அக்கிலிஸுக்கும் நேர்கிறது. இதுபுறமிருக்க
அக்கிலிஸின் உற்ற நண்பன் ஒருவன் போர்க்களம் புகுகிறான். அவன் மாபெரும் வீரன். டிராய் வீரர்களை அவன் பந்தாடுகிறான். ஆனால் மஹாபாரதத்தின் அபிமன்யூ போலவே அவனை கொன்று விடுகிறார்கள். அவனை கொன்றதோடு மட்டுமல்லாமல் அவன் சடலத்தை அவமானப்படுத்தி கொடுமையான சிறுமைகளை செய்கிறார்கள். அப்படிச் செய்பவர்களில் முதன்மையானவன் பாரிஸின் அண்ணன் ஹெக்டார். இதைக்கண்டதும் நண்பன் மரணத்திற்கு வெஞ்சினம் கொள்ளும் அக்கிலிஸ் ஹெக்டாரை கொன்றே தீர்வது என போர்க்களம் வருகிறான். இந்தப் போர் தான் இந்த இதிகாசத்தின் உச்சம் என்கிறார் எஸ்.ரா

அந்தப்போரை காண ஹெலன் முதல் முறையாக வருகிறாள். அவளுக்காக வேர்விட்டு கிளை விரிந்து நடக்கும் இந்தப் போரை அவள் காண்கிறாள்..

அக்கிலிஸின் ஆக்ரோசம், வீரத்தின் முன் செத்து மடிகிறான் ஹெக்டார்

இலியட் இத்தோடு முடிகிறது. அதன்பின் நடந்த புராணச் சம்வபங்களை அழகாக விவரிக்கிறார் எஸ்.ரா. கிரேக்கத்தின் கடவுள் எண்ணிக்கைகள், நம்பிக்கைகள், கற்பனைக்கெட்டாத சம்பவங்கள் ஆகியவற்றை அழகாக எழுதியுள்ளார் எஸ்.ரா! இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்கு பொக்கிசம் இந்தப் புத்தகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *