கோல்ட் கால்- விமர்சனம்

நான்கு இளைஞர்களின் எதார்த்த வாழ்வைச் சொல்லும் ஒரு படத்தை மிகமிக எதார்த்தமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை

பெங்களூரில் நடக்கிறது கதை. ஒரு மார்க்கெட்டிங் கம்பெனிக்கு வேலைக்குச் சேர்கிறார்கள் நான்கு இளைஞர்கள். அவர்களில் பொறுப்புள்ள ஒருவரைத் தவிர மற்றவர்கள் மார்க்கெட்டிங் வேலையைச் செய்வதேயில்லை. ஆனால் ஒன்று எப்போதும் ஜாலியாகவே இருக்கிறார்கள். இந்த நால்வருக்கும் வேலையில் உயர்வு வந்ததா? காதலில் வெற்றி வந்ததா? வாழ்வில் வளர்ச்சி வந்ததா? சும்மா சும்மா வரும் இன்னல்களை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பது தான் படத்தின் கதை

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி இவர்கள் தான் படத்தின் மெயின் லீட் கேரக்டர்கள். ஹீரோ போல் வரும் சித்து தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் எதார்த்தம் மீறாமல் நடித்துள்ளதால் மிகவும் ரசிக்க முடிகிறது

சரவணன் தனது ஒளிப்பதிவை திறம்பட செய்துள்ளார். எல்லா வளைவு நெளிவுகளையும் திறம்பட காட்டி ஜென்ஸியர் உள்ளத்தில் இடம்பிடிக்கும் வேலையை படம்பிடித்து செய்துள்ளார். இசையமைப்பாளர் பிரணவ் கிரிதரன் பாடல்களில் இன்னுமே கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணி பரவாயில்லை. இந்தப்படத்தில் வசனகர்த்தாக்கள் நிறைய. பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட் என நான்குபேர் எழுதியுள்ளனர். சில ஒன்லைன் கவுண்டர்கள் நன்றாக எடுபட்டுள்ளது

இந்தப்படத்திலே சொல்லப்பட்டது போல, இவர்கள் மார்க்கெட்டிங் கம்பெனியில் எந்தப் பொருளை மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என்பதைச் சொல்லவேயில்லை. படம் பார்க்கும் நமக்கு அது தேவையும் படவில்லை. சிறந்த உலக சினிமாக்களில் ஒன்றான ஆங்கிரி மேன் படத்தை வைத்து ஒரு கதை சொன்னது இன்ட்ரெஸ்டிங்காக இருந்தது. இப்படியான பல ஐடியாக்கள் நம்மை ஈர்க்கவே செய்கின்றன. இந்தப்படத்தின் பெரும்பலமே எதார்த்தம் மீறாத ரைட்டிங்கும் மேக்கிங்கும் தான். மேலும் எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இளைஞர்களாக நால்வரையும் காட்டியது நல்ல திரைக்கதை உத்தி! இன்னும் பலமான சில விசயங்களைச் சேர்த்திருந்தால் படம் பட்டையக் கிளப்பியிருக்கும். இருந்தாலும் ஒரு டீசன்ட் வாட்ச் படமாக மனதில் நிற்கிறது இந்த கோல்ட் கால்

3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *