மூழ்கும் கப்பலில் மூழ்காத காதலைச் சொன்ன ஹாலிவுட் படம் டைட்டானிக்! இந்தத் தமிழ் டைட்டானிக்கில் மூன்று பேரின் காதல் கதையைச் சொல்லியுள்ளனர்
கலையரசன், காளிவெங்கட், ராகவ் விஜய் மூவரும் ஒரு ரெயில் பயணத்தில் சந்திக்கின்றனர். முதல் சந்திப்பிலே நண்பர்களாகும் அவர்கள் தங்களின் காதல் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். காளிவெங்கட் தனது பள்ளிக்கால காதலைச் சொல்கிறார். கலையரசன் அவரின் கல்லூரிக் கால காதலைச் சொல்கிறார். ராகவ் விஜய் தனது அலுவலக காதலைச் சொல்கிறார். மூன்றுபேரின் தனித்தனி காதலும் ஒரு கட்டத்தில் ஒரேபுள்ளியில் இணைகிறது. அது தரும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் படத்தின் திரைக்கதை
கலையரசன் சற்று எதார்த்தத்திற்குப் பொருந்தாத கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். காளிவெங்கட் கொங்கு தமிழில் பேசி அட்டகாசமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரின் கதாப்பாத்திர வார்ப்பு மட்டுமே நடைமுறை மனிதரை நினைவூட்டுகிறது. அந்தக் கேரக்டருக்கு காளிவெங்கட்டும் தனது அருமையான நடிப்பால் உயிர்கொடுத்துள்ளார். ராகவ் விஜய் இயல்பான நடிப்பால் வசீகரிக்கிறார். கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி இருவருமே அழகாக இருக்கிறார்கள். ஆனால் இருவர் நடிப்பிலும் இயல்புத்தன்மை ஏகத்திற்கும் மிஸ்!
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே சிறப்பு. ஒளிப்பதிவாளர் பாலுவின் வேலையை 8 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப்படத்தை வைத்து ஜட்ஜ் பண்ணக்கூடாது. இருந்தாலும் ஒளிப்பதிவு மோசமில்லை
மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் ஒன்லைனை கையிலெடுத்துள்ளார் இயக்குநர் ஜானகிராமன். ஆனால் திரைக்கதை அமைப்பில் கோட்டைவிட்டுள்ளார். குறிப்பாக பெண் கேரக்டர்களை இன்னும் கூர்மையாக எழுதியிருக்கலாம். அவர்களுக்கான எமோஷ்னல் மருந்திற்கும் எடுபடவில்லை. கலையரசனின் திடீர் மனமாற்றமும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. Over all பர்ஸ்ட் ஹால்ப் சுமார். செகண்ட் ஹால்ப் சுமாருக்கு மேல்!
2.5/5
-வெண்பா தமிழ்

