நவீன தலித் சிறுகதைகள்- நூல் விமர்சனம்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் வன்னியரசு அவர்களை ஒரு நேர்காணல் செய்தேன். அதில் அவர், “ஒரு தலித் வலியை தலித்தால் மட்டும் தான் உணர முடியும். ஆனால் தலித் அல்லாதோர் அதை ஓரளவு உணர்ந்து பிறருக்கு வெளிப்படுத்தும் வேலையைச் செய்யும் போது நாம் ஊக்கப்படுத்த வேண்டும்” என்ற பொருளில் சில வார்த்தைகள் சொன்னார். அது மிகச்சரியாகப் பட்டது. இந்த நூலில் வன்னியரசு அண்ணனின் வார்த்தைகளை முன்மொழிவது போல அழகிய பெரியவன் எழுதிய, “எட்டாம் வகுப்பு அ பிரிவில் ஒரு தமிழாசிரியர்” என்ற சிறுகதை இருந்தது. கூடவே தலித்களின் வாழ்வையும் வரலாற்றையும் தலித் அல்லாதவர்க்கு புரிய வைக்கும் பெருங்கடமை படித்தோர்க்கு இருக்கிறது என்பதையும் அழகிய பெரியவனின் கதை பறை சாற்றியது.

கணேஷ் தண்டபாணி என்ற அந்த தமிழாசிரியருக்கு தமிழ் தவிர்த்து, கணிதம், அறிவியல் என நிறைய ஞானம் உண்டு. ஆனால் அவருக்கு மாணவர்களுக்கு அம்பேத்கர் குறித்த பாடம் எடுக்கவேண்டும் என்றால் மட்டும் கசக்கும். அம்பேத்கர் பற்றிய தகவல்களை தேடுவதற்கே அவருக்கு வெறுப்பாக இருக்கும். இப்படியான அந்த தமிழாசிரியர் கடைசியில் உடைந்த மனதோடு உருக்கமாக அம்பேத்கர் குறித்து பாடமெடுப்பதாக கதையை முடித்திருப்பார் அழகிய பெரியவன். அம்பேத்கர் ஏன் மகாத்மா காந்தி போல எல்லோராலும் கொண்டாடப்படுவது இல்லை என்ற கேள்வியை எழுப்பி, அம்பேத்கரை ஏன் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தெளிவையும் இந்தச் சிறுகதையில் ஒரு படித்த கதாப்பாத்திரம் வந்து பேசும். அடடா அற்புதம்.

16 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த சிறுகதை இது

இதில் பல கதைகளை புதியவர்களும் பெண்களும் எழுதியுள்ளனர். புதியவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு வேகமும், கோபமும் தரமாக வெளிப்பட்டுள்ளது. இத்தனை கதைகளையும் கச்சிதமாக தேர்ந்து தொகுத்துள்ளார் ப்ரதிபா ஜெயச்சந்திரன். அவர் எழுதிய மதனமாலையம்மன் கதைப்பாடல் சிறுகதையும் சிறப்பாக இருந்தது

பொருளாதர குறைவுற்ற மும்பை வாழ் தலித் மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்திய புதியமாதவி அக்கா எழுதிய காத்திருப்பு சிறுகதையும் மெச்சத்தக்க ஒன்று.

எதை எழுதவேண்டும் என்ற தெளிவும், எதற்காக எழுதவேண்டும் என்ற தெளிவும் இந்த நூலில் எழுதியுள்ள அனைவருக்கும் இருந்ததாக உணர்ந்தேன்

இந்த நூலை என் புத்தக வெளியீட்டு விழாவில் அன்பளித்த, என் ஆரம்பகால ஆசான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழர்
Ku Arumugam கு.ஆறுமுகம் அவர்களுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *