தான் யாருக்கு சம்சாரம் ஆகவேண்டும் என்பதை ஒரு சம்ஹாரத்தை நிகழ்த்தி உணர்த்த துடிக்கிறார் நாயகி! அதன் பாதிப்பு என்னென்ன செய்கிறது என்பதை சஸ்பென்ஸ் திரில்லரோடு படமாக்கியுள்ளார் இயக்குநர் ராம் பிரபா
நடிகர் பிரஜன் திருமணம் முடித்தவர். ஒரு அண்ணனாக அவர் தன் தங்கைக்கு ஒரு திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்கிறார். அந்தத் திருமணம் மீது விருப்பமில்லாத அவரது தங்கை ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார். அந்த முடிவை பிரஜன் எப்படி எதிர்கொண்டார்? பிரஜன் தங்கை எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதே படத்தின் திரைக்கதை
நீண்ட நெடுங்காலமாக சின்னத்திரையில் தெரிந்தமுகமான பிரஜன் வெள்ளித்திரையிலும் ஓரளவு முத்திரைப்பதித்துள்ளார். அண்ணனாக கணவனாக ஸ்கோர் செய்யவே செய்கிறார். அவரின் தங்கையாக வரும் சர்மிஷா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு சின்ன ஏரியாக்குள்ளே ஸ்கோர் செய்ய வேண்டிய சூழல்! அதன் கனம் உணர்ந்து நடித்துள்ளார் சபாஷ்! கணேஷ் சாவரட்டில்(என்னய்யா பேரு?) வில்லன் ரோலைச் சரியாகச் செய்துள்ளார். நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றால் ராஜா, ராம் பிரபா ஆகியோர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்
ஒரே இடத்தில் ஒரே இரவில் தான் கேமரா சுற்றவேண்டிய சூழல்! ஆனாலும் அந்த ஒளிப்பதிவை ஓரளவு நன்றாகச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம். வி.ஜி.ஹரி கிருஷ்ணன் பின்னணி இசைக்காக கடும் உழைப்பைப் போட்டுள்ளார். அது நன்றாக ரிசல்ட்.தந்துள்ளது
ராம் பிரபா சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதையை முழுமையாக நம்பியுள்ளார். இன்னும் ஆக்கப்பூர்வமான காட்சியமைப்புகளை கோர்த்திருக்கலாம் என்றாலும் சில நல்ல ஐடியாக்கள் படத்தைக் காப்பாற்றியுள்ளது
சம்ஹாரம்- ஓரளவு நல்ல சமாச்சாரம்
3/5
-வெண்பா தமிழ்

