தஸ்தயெவ்ஸ்கி கொடுத்துச்சென்ற இன்னொரு மாஸ்டர் பீஸ்!
“பெண்களோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு பிடித்த மாதிரி மட்டுமே பேச வேண்டும்” என்கிறார் கதையில் வரும் முதியவரான மூரின். மூரின் ஒரு மந்திரவாதி எனவும் தந்திரக்காரர், வசியக்காரர் எனவும் அறிய முடிகிறது. கதரீனா எனும் இளமையான பேரழகுப் பெண் அவரிடம் சரண்டைந்து கிடக்கிறாள். அவளை காதல் மூலம் மீட்டெடுக்க நினைக்கும் ஆர்டினோவ் எனும் இளைஞனுக்கு மூரின் தரும் அதிர்ச்சி வைத்தியங்கள் அபாரமானவை! முதியவரான மூரினோடு கதரீனாவை முதல் முதலில் பார்க்கும் ஆர்டினோவ் காதலாகி கசிந்துருகி அலைகிறான். அவனின் இதயம் பொங்கி வழிவதை உணரும் இயற்கை அந்த பேரழகியின் வீட்டிற்கே அவனை குடிபோகச் செய்கிறது. கிழவர் மூரினுக்கு அவனைப்பிடிக்கவில்லை. கதரீனாவிற்கு அவனைப்பிடிக்கிறது. அவனிடம் ஏற்பட்டுள்ள காதலை வெளிப்படுத்துவதற்கு அவள் கொள்ளும் மன சஞ்சலத்தை தஸ்தயெவ்ஸ்கியைத் தவிர்த்து யாராலும் இப்படி எழுத முடியாது. அந்த எழுத்தின் ஆழம் நம்மை பித்துப்பிடிக்க வைக்கிறது. தமிழில் மிகத்தரமாக மொழி பெயர்த்த எம்.ஏ.சுசீலா அவர்களும் பாராட்டுக்குரியவர்
“கட்டற்ற சுதந்திரம் தான் அன்பு” என்கிறார் ஓஷோ! ஆனால் கட்டற்ற அன்பு… போலியாக கட்டமைக்கப்படும் அன்பு இவை மனிதனை அடிமையாக்கவும் செய்யும் என்பதை இந்த நூல் சொல்லிச்செல்கிறது
பெண்களின் மனம் கடலை விட பெரியது என்பதை அப்பட்டமாக மறுக்கிறார் கதையின் வில்லனான மூரின். போலித்தனமான அன்புதான் கடலை விட பெரியது என்பதை கதையின் போக்கு உணர்த்துகிறது.
நூலை வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது…
‘போலித்தனம் தற்காலிக வெற்றிகளை குவிக்கும்! அன்பு வலிபெற்று வாழ்ந்தாலும் முடிவில் ஜெயிக்கும்”

