“உதட்டில் சுடர்ந்த
உன் உயிரின் இளவெயிலை
உனக்குத் தெரியாமல் உறிஞ்சி சூரியனானேன்
தெரிந்ததும் திடுக்கிட்டாய்
வானத்தை நோக்கி நீ
கோபத்தில் எறிந்த கற்கள்
மேகத்தை தாண்டியதும் விண்மீன்களாயின”
ஒரு குட்டியான இன்பச்சேர்க்கை நிகழ்ந்தபின் இந்தக் கதையின் நாயகன் சந்தனப்பாண்டி இப்படியொரு கவிதை எழுதுகிறான். சந்தனப்பாண்டி தான் ஜெ.பிரான்சிஸ் கிருபா!
தமிழில் இப்படியொரு கூர்மையான மொழிநடையில் ஒருநாவலை நான் வாசித்ததே இல்லை. சந்தனப்பாண்டிக்கு மனநோய் வந்திருக்கும் சூழலில் நாவல் துவங்குகிறது. தனது பெரியப்பா மகளான அமலா அக்காவும் அவனும் பெரும் ப்ரியம் கொண்ட உறவுகளாக இருக்கிறார்கள். அவளை வீட்டில் கன்னிதியாஸ்திரியாக்க முடிவெடுக்கிறார்கள். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்பதை பாண்டி அறிகிறான். எச்சூழலிலும் அமலாக்கா இல்லாத வாழ்வு அவனுக்கு அகத்திற்கு இணக்கமாக இல்லாததை உணர்கிறான். இவனின் பித்தநிலை கொண்ட அன்பை எதிர்கொள்ள முடியாமல் அமலா தவிக்கிறாள். கன்னியாகுமாரி கடற்கரை அருகே இவர்களின் அன்பிற்கு ஒரு முடிவற்ற தீர்வு கிடைக்கிறது. அதன்பின் கடக்கும் பாண்டியின் வாழ்வில் சித்தமும் பித்தமும் நிரவிக்கிடக்கிறது
வாழ்வில் நாம் முடிவுரையாக ஒன்றை நினைத்தால் இயற்கை வேறோர் புள்ளி வைக்கும் தானே! அப்படி பாண்டி வாழ்வில் இளம் கன்னியாஸ்திரி பயிற்சியிலிருக்கும் சாரா வருகிறாள். அதன்பின் நடக்கும் இவர்களின் பயணம் பெருமழைக்கவிதை
கதாப்பாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகமிக ஆழமானவையாக இருக்கிறது. “நீரில் நெளியும் நிழல் போல அசைந்தாள்” என்று போகிற போக்கில் எழுதியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. வாக்கியங்களெல்லாம் காட்சிகளாகும் அற்புதத்தை 436 பக்கங்களில் நிகழ்த்தியுள்ளார் ஜெ.பிரான்சிஸ் கிருபா. அவரின் மறைவு பேரிழப்பு! சர்வ நிச்சயமாக இதுவொரு மகத்தான நாவல். மிகவும் கவனம் குவித்து வாசிக்கவேண்டும்
வாசிப்பை ஊக்கப்படுத்த என்னைப் போல் எளியபிள்ளைகளுக்கு புத்தகங்கள் வாங்கித்தரும் Kabilan Krs அண்ணனுக்கு நன்றி

