மகா கவிதை- நூல் விமர்சனம்

வைரமுத்துவின் பஞ்சபூதப்பாய்ச்சல் இந்தத் தொகுப்பு. பூமி பற்றிய தகவல்களை கொடுத்து அதன் பின் அதன் பயன்பாடுகள் செயல்பாடுகளைச் சொல்லி, நாம் இந்த மண்ணை எப்படி வைத்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வைத்திருக்கிறோம்? என்பதாக பயணிக்கிறார். அதேபோல் நீர், நெருப்பு, வளி, வெளி என பஞ்சபூதங்களை தமிழ் மேகங்களால் அலங்கிரித்து, நம்மை எச்சரிக்கிறார். சொல்லும் சொல்லில் நேர்மையும், உண்மையும் அறிவியலும் கொட்டிக்கிடக்கிறது. கவிதை என்பதே கற்பனையும் பேண்டஸியும் சார்ந்தது. “கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்” என்பதெல்லாம் சாத்தியமற்றது. ஆனால் மொழியீர்ப்பு கொண்டது. இந்தத் தொகுப்பில் வைரமுத்து கறாரான ஆசிரியகாவே பயணிக்கிறார். வளரும் இளந்தலைமுறைக்கு நரைமுடி வரும் வரை பூமியை வளமையோடு வைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இயற்கையின் சுழற்சியை இலகுவாக இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும், அரிய தகவல்களை அறிவில் ஏற்றி மனதுக்குள் நிரப்ப வேண்டும் என்ற வேட்கையோடு எழுதியிருக்கிறார்.

“மனிதன் கோடரியோடு வருவது கண்டு காற்றைக் கட்டிக்கொண்டு அழுகிறது காடு” என்ற வரிகளில் பி.லிட் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அறிவுமதியின் ‘மரம் வெட்டிய கோடரி. பார்த்துக்கொள் கடைசி மழைத்துளி’ என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. இன்னும் நிறைய பிரபலமான ரைட்டர்கள், தங்களின் மொழிவழியாக நினைவுப்படுத்த வேண்டிய கருத்து இது. ஏனெனில் மரத்தை மறப்பது, கரத்தை இழப்பதாகும். “மரம் தான் மரம் தான் எல்லாம் மரம் தான். மறந்தான் மறந்தான் மனிதன் அதை மறந்தான்” என்ற வைரமுத்து வரிகளை நினைவுகொள்ள வேண்டும்

தண்ணீர் மனிதனில் 75%,
குழந்தையில் 90%,
ரத்தத்தில் 92%, உருளைக்கிழங்கில் 80% இருக்கிறது என்ற தகவலோடு, “மேக தேவதைகளின் தாய்மொழி தண்ணீர்” என்கிறார். இவ்வரிகள் கவித்துவம்& உயிர்த்தவம். ஒரு கோப்பை காபித்தூள் 140 லிட்டர் தண்ணீர் குடிக்கிறது. எல்லாருக்கும் ஈந்துரங்கும் நீர் தான் நிஜமான கம்யூனிசம். ஆனால் அதையும் முதலாளித்துவப்படுத்தி விட்டோம். அதற்கான காரணம் நூலில் இருக்கிறது.

காற்று பற்றி பேசுகையில், “ஒரு மனிதன் உண்ணும் உணவு ஒன்றரை கிலோ, உறிஞ்சும் நீர் இரண்டு கிலோ, உள்ளிழுக்கும் காற்று ஒன்பது கிலோ” என தகவலுரைக்கிறார். காற்றின்றி நேற்றும் இல்லை..இன்றுமில்லை, என்றுமில்லை. ஆனால் அப்படியான காற்றில் நாம் சேற்றை வாரியிறைக்கிறோம். உணவையும் நீரையும் நிராகரிக்க முடியும். கெட்டுப்போயிருந்தாலும் காற்றை சுவாசித்தே ஆகவேண்டும். அப்படியெனில் அந்தக் காற்றை நாம் எப்படி வைத்திருக்க வேண்டும்? இயல்பாகவே இக்கேள்வி எழுகிறது.

காற்றுக்கும், நீருக்கும், மண்ணுக்கும் நாம் நிறைய கடமைப்பட்டுள்ளோம். கடமையைச் சரியாகச் செய்தால் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கலாம்

இந்த நூலில் முழுக்க முழுக்க அறிவியல் தகவலும், அறிவுரை மொழியும் தானா? என்றால், ஆமாம் என்பேன். ஆனால் அதற்குள்ளும் கவிப்பேரரசு ஆங்காங்கே மிளிர்கிறார்..

சாம்பிளுக்கு ஒன்று..

“ஒவ்வொரு கிளையும் ஆகாயம் சுத்திகரிக்கும் ஒட்டடைக் குச்சி”

மகா கவிதை- மனதில் கொண்டு செயலாற்ற வேண்டிய அறிவியல் பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *