“லவ் பண்ற ரெண்டுபேரு அவங்க ரெண்டுபேரோட எக்ஸ்களை மீட் பண்ண போனா என்னாகும்?” அட க்யூட்ல!
ஹீரோ அபிஷன் ஜீவந்த் 96 ராம் பிறந்த காலத்தில் பிறக்கவில்லை என்றாலும் ராம்போல மனம் வாய்க்கப்பெற்றவராக இருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படுத்திய காதல் தோல்வியும் நட்புத் தோல்வியும் அவரை யாரோடும் ஒண்ட விடாமலும், கல்யாணத்திற்காக யாரையும் அண்ட விடாமலும் செய்கிறது. ஒரு கட்டத்தில் இன்ஸ்டா பிரபலமான நாயகி அனுஸ்ரா ராஜனைச் சந்திக்கிறார். ஆக்ஷுவலா அது பெண் மற்றும் மாப்பிள்ளைப் பார்க்கும் சந்திப்பு தான். அதன்பின் இருவரும் பேசுகிறார்கள். வளரும் அவர்களின் பேச்சு அவர்களின் கடந்தகால காதலுக்குள் செல்கிறது. அந்தக் கடந்த கால இரு காதல்கள் சார்ந்து இருவரும் ஒரு விசித்திர முடிவை எடுத்து பயணிக்கிறார்கள் அந்த முடிவின் என்ட் என்ன என்பதை ஹேப்பி என்டிங்-ஆக முடித்துள்ளார் இயக்குநர் மதன்
அபிஷனுக்கு இந்தப் படம் நடிகராக இரண்டாவது படம் ஹீரோவாக முதல் படம். ஆனால் முதல்பட ஹீரோ என்ற சுவடேயில்லாமல் ஆழமான நடிப்பால் கவர்கிறார். அனுஸ்ரா ராஜன் படத்தை ஒன் வொமன் ஆர்மியாக தாங்கியுள்ளார். அவர் திரையில் காட்டும் குட்டி குட்டி ரியாக்சன்கள் தான் இந்த லவ்வர்ஸ்டேயின் ஸ்ட்ராங் ரீல்ஸ் மெட்டிரியல். (யெஸ் மார்க் மை வேர்ட்) எமோஷ்னல், உறுதி, கனிவு என எல்லா உணர்வுகளையும் கலந்து கட்டி லல் வித் யூ எனச் சொல்ல வைக்கிறார். மற்றொரு நாயகி போல் வரும் நடிகையும் பின்னியெடுத்துள்ளார். பின்பாதியில் ஒரு காட்சியில் அவர் காட்டியிருக்கும் பெர்பாமன்ஸ் படத்தின் வாவ் பேக்டர். ஏனைய நடிகர்கள் எல்லோருமே கச்சிதம் கச்சிதம்
ஷான் ரோல்டன் காதல் கியரை மாற்றி மாற்றிப் போட்டு படத்தை சீரான பாதையில் கொண்டு போகிறார். பாடல்கள் சூப்பர் என்றால் பேக்ரவுண்ட் மியூசிக் அசத்தல். ஸ்ரீரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு காதலர்களின் ஸ்கிரீன்ஷாட்ஸ் மெட்டிரியல். யெஸ் எல்லா ஷாட்களிலும் காதலை நிரப்பியுள்ளார்.
எழுத்திலும், காட்சியமைப்பிலும் மிகுந்த கவனத்தை கையாண்டுள்ளார் இயக்குநர் மதன். மிக மெதுவாக நகரும் முன்பாதியில் ஸ்ட்ராங்கான விசயங்களை மனதில் ஏற்றி வைக்கிறார். பின் ஏற்றி வைத்த எல்லா விசயங்களையும் பின்பாதியில் அட சொல்ல வைக்கிறார். சின்னச் சின்ன லீட்ஸ், குட்டி குட்டி வசனங்கள், ஒரு கேரக்டரை மற்றொரு கேரக்டர் அணுகும் விதம் என எல்லாவற்றிலும் ரசிகனை மதித்து உழைப்பைப் போட்டுள்ளார்.
ஒருவர் பற்றி நாம் எடுக்கும் முன்முடிவுகளுக்குப் பின்னால் வலிமிகுந்த பின்விளைவுகள் இருக்கும் என்பதையும், தவறை உணரும் யாவரையும் தவறாமல் அரவணையுங்கள் என்றும் சொல்லிருக்கும் இப்படத்தை காதலுடன் கொண்டாடுங்கள்!
4/5
-வெண்பா தமிழ்

