கிச்சா சுதீப் மாஸ், சீன்களின் க்ளாஸ் என பயணிக்கும் மார்க் பாஸ் ஆனதா?
ஒரு கதைக்குள் ஒரு ட்ராவல் இருந்தால் அது எதார்த்தம். ஒரு ட்ராவலில் பல கதைகள் இருந்தால் அது பதார்த்தம். யெஸ் இப்படம் எனும் மீல்ஸில் பல ஐட்டங்கள் உண்டு
சஸ்பென்சன் செய்யப்பட்ட போலீஸ் ஹீரோ சுதீப். யூனிபார்ம் இல்லாட்டாலும் டூட்டி பார்க்கும் 90-களின் மெட்டிரியல் அவர். அவர் கஸ்டடிக்குள் 2000 கோடி ரூபாய்க்கான போதைப்பொருட்கள் வருகிறது. அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரரான குரு சோமசுந்தரம் முதல்வரின் மகனுக்கு நெருக்கமானவர். அந்த முதல்வரின் மகன், முதல்வரான தன் அம்மாவைக் கொன்றுவிட்டு பதவி பெற துடிப்பவர். இன்னொரு பக்கம் தன் தம்பியின் திருமணத்தை வைத்து, தனது தாதா தொழிலை செம்மைப் படுத்த நினைக்கிறார் நவீன் சந்திரா.ஆனால் அவரின் தம்பியான விக்ராந்த் வேறோர் கால் எடுக்கிறார். இப்படியான குழப்பக் கும்மிக்குள் 19 குழந்தைகள் கடத்தப்படும் சம்பவமும் நடக்கிறது. இந்தக் கிளைகளில் எல்லாம் ஹீரோ எப்படி ட்ராவல் ஆனார் என்பதே மார்க்கின் திரைக்கதைப் பயணம்
லேசாக அசைந்தாலே அதற்கு ஒரு பிஜிஎம் வேண்டும் என்ற அளவில் தனது மேனரிஜத்தை இன்ச் பை இன்ச் ஆக செதுக்கியுள்ளார் ஹீரோ கிச்சா சுதீப். நிச்சயமாக ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக உயர்ந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஆக்சனில் நிறைய ரிஸ்க் எடுத்து அசத்தியுள்ளார். அவரைத் தவிர்த்து, நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், விக்ராந்த், யோகிபாபு என யாரும் பெரிதாக ஸ்கோர் பண்ண முடியவில்லை என்பதே நிஜம்
அஜனீஷ் லோக்நாத் தனது இசையால் கொலைவெறி ஆட்டத்தை ஆடியுள்ளார். இசை சில காட்சிகளில் ஈர்ப்பது போலவே பல காட்சிகளில் இரைச்சலை தந்து இம்சிக்கவும் செய்கிறது. இரண்டு பாடல்கள் மட்டும் வொர்த்து. ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவை படத்தின் மற்றொரு ஹீரோ என ஆணித்தரமாகச் சொல்லலாம். அவ்வளவு அழகழகான ப்ரேம் வைத்துள்ளார். CG வொர்க்கும் ஒகே தான். 6 ஸ்டண்ட் இயக்குநர்களுக்கு மேல் வேலை செய்துள்ளார்கள். தரமான பணி அவர்களின் பணி
ரைட்டராக இயக்குநர் விஜய் கார்த்திகேயா சொதப்பிய இடங்கள் நிறைய! குறிப்பாக ஹீரோவுக்கான அல்டிமேட் கோல் என்ன என்பதை இயக்குநர் தெளிவுப்படுத்தவே இல்லை. அந்தத் தெளிவு இல்லாததாலே நாம் ஹீரோவோடு ஒட்டமுடியவில்லை. மேலும் எக்கச்சக்க எமோஷ்னலை உள்ளுக்குள் உலவு விட்டுள்ளதால் படத்தோடு நாம் மல்லுக்கு நிக்க வேண்டியுள்ளது. எதைத்தொட எதைவிட என்ற குழப்பம் ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கே வரும்போது நமக்கு வராதா? But இந்தப்படம் எங்கு கரையேறுகிறது என்றால் ஆக்சனில் மட்டும் தான். ஆக ஆக்சன் விரும்பியாக நீங்கள் இருந்தால் இந்த மார்க்-ஐ நோட் பண்ணிக்கோங்க!
2.75/5
-வெண்பா தமிழ்
#Mark

