சினிமா தொழில் ஏ டூ இசட்- நூல் விமர்சனம்

சினிமா தயாரிக்க வருபவர்கள் மீது பெரும் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்ட நூல் இது. புத்திமதி என்ற பெயரில் ரம்பம் போடாமல், சினிமா ஒரு தொழில் என்பதை எவ்வகையில் உணர வேண்டும் என்பதை கமர்சியல் ரைட்டிங் மூலம் பாடமெடுத்துள்ளார் அண்ணன் பாலமுருகன் செந்தூர் பாண்டியன்

தயாரிப்பாளராக வரும் ஒருவருக்கு, “நல்ல படம் எடுக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும்” என்ற நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும். இத்தொழிலை ஒரு கனவாக அணுகவே கூடாது. இதை லாபம் நோக்கு கொண்டதாகவே அணுக வேண்டும். அதுதான் தயாரிப்பாளருக்கு நல்லது. வேறு எல்லாத் தொழிலிலும் பணம் போடுபவர் தான் முதலாளி. ஆனால் சினிமாவில் அப்படி அல்ல. அந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். சகல போதைகளும் சரளமாக புழங்கும் சினிமாவில் புரிதல் இல்லாத தயாரிப்பாளரை வீழ்த்துவது வெகு சுலபம். அதனால் தயாரிப்பாளர்கள் சற்று பயிற்சி எடுத்தபின்பே பணத்தை இரைக்க வேண்டும். இல்லையெனில் இரைத்த பணத்திற்கு இழப்பு ஏற்படும். சில படங்களில் புரொடக்சனில் பணியாற்றியுள்ளதால் இந்த நூலில் முழுமையாக உடன்பட முடிந்தது. பாலமுருகன் செந்தூர்பாண்டியன் ஒரு திரைப்பட பத்திரிகையாளர் என்பதைத் தாண்டி ஒரு படைப்பாளியாகவும் இருப்பதால் கதை தேர்வு குறித்தும், திரைக்கதை அமைப்பு குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு காரியத்தில் இறங்கும் முன் அதைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அல்லது தெரிந்துகொள்ள விரும்ப வேண்டும். அட்லீஸ்ட் தெரிந்தவர்களை கூடவாவது வைத்துக் கொள்ள வேண்டும். சினிமாவில் பலர் அடி வாங்குவது இந்த இடங்களில் தான்.

திரைக்கதை தான் சினிமாவின் ஆன்மா. அதை சுஜாதா அடிக்கடி வலியுறுத்துவார். அதற்காக தனிப்புத்தகத்தையே எழுதியுள்ளார். பாலமுருகன் செந்தூர்பாண்டியனும் திரைக்கதை குறித்து அருமையாக எழுதியுள்ளார். ஒரு கவிதையை எப்படி திரைக்கதையாக்கி காட்சிப்படுத்தலாம் என்ற விளக்கம் அல்டிமேட்டாக இருந்தது.

சுஜாதா தனது, “திரைக்கதை எழுதுவது எப்படி?” நூலின் இறுதியில் ஒரு திரைக்கதையின் கால் பாகத்தை வாசிக்க கொடுத்திருப்பார். மீதமுள்ள திரைக்கதையை நீங்களே முடிங்கள் என்பதாகவும் சொல்லியிருப்பார். அந்த கால்பாக திரைக்கதை அவ்வளவு மாஸாக இருக்கும். அதேபோல் இந்த நூலிலும் பாலமுருகன் செந்தூரபாண்டியன் தனது கால்பாக திரைக்கதை ஒன்றை எழுதியுள்ளார். நல்ல எமோஷ்னல் திரில்லர் கேட்டகிரி ஸ்கிரீன்ப்ளே அது. செம்ம இன்ட்ரெஸ்டிங்! நல்ல வாசிப்பனுபவம்

கரிசல் மீடியா பதிப்பகத்தின் நிறுவனர் அண்ணன் கரிசன் மகேந்திரன் நூலை சிறப்பாக பதிப்பித்துள்ளார். சினிமா விரும்பிகளுக்கு மட்டுமல்ல..சினிமாவில் இருப்பவர்களுக்குமே தேவையான நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *