Life is beautiful, வாழ்க்கை வாழ்வதற்கே, உன்னால் முடியும், இதோ வெற்றி உன் மடியில் என்பன போன்ற பாசிட்டிவ் நூல்கள் தான் ஒரு காலத்தில் எனது ஆதர்சம். ஆனால் பத்தாண்டுகளாக வாசிப்புத் தளம் மாறிவிட்டது. தோழி ஒருவர் அடிக்கடி பாசிட்டிவ் நூல்களால் நிரம்பித் திரிவார். நான் சிலசமயம் நீ எப்ப பாசிட்டிவ் நூல் ஆகுறது? என்று கேட்பேன். ஒரு கட்டத்தில் பாசிட்டிவ் நூல்களை தூர வைத்துவிட்டு நாம் பாசிட்டிவ் நூலாக (ஆளாக) மாற வேண்டும் என்று தோன்றும்.
அந்திமழை இளங்கோவன் சார் ஒரு துயரச்சம்பவத்தைச் சொன்னாலும், அச்சம்பவம் முடியும் போது அதில் ஒரு பாசிட்டிவ் நோட் இருக்கும். இயல்பிலே பாசிட்டிவான மனிதர் அவர். சில மணித்துளிகளேனும் அவரோடு பேசியுள்ளேன் என்பதால் அவரின் இந்த புத்தகம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று.
மனதை சரியாக நிர்வாகம் செய்வதற்கு அன்பும் சகிப்புத்தன்மையு மிக அவசியம்! பணத்தை சரியாக கையாள்வது நல் வாழ்விற்கு மிகவும் அவசியம். ‘எதிர்பாராமல் வரும் செலவுகளை கூட எதிர்பார்த்து திட்டமிட வேண்டும்’ என்று ஒரு இடத்தில் இளங்கோவன் சார் சொல்கிறார். தனியார் மருத்துவமனையில் லட்சங்களை கடன் வாங்கிக் கட்டும் போதுதான் நிறையபேர்களுக்கு இன்சூரன்ஸின் அவசியம் புரிகிறது. தொலைத்த பின் தேடுவதில் எந்த இன்பமுமில்லை தானே?
மணமுறிவுகள் குறித்த கட்டுரை, அவமானங்களை எப்படி வெகுமானம் ஆக்குவது என்பது குறித்த கட்டுரை இரண்டும் தரம். மிக முக்கியமாக என்னை அதிகம் கவர்ந்தது வாசிப்புக் குறித்த கட்டுரை. வருடத்திற்கு 50 புத்தகங்கள் படிப்பவர்களின் லிஸ்ட்-ஐ வாசிக்கையில் மெய் சிலிர்த்தது. பெரிய பெரிய இடங்களுக்குச் சென்ற எல்லோருக்குப் பின்னாலும் வாசிப்பு நிறைந்துள்ளது என்பது என்னைப் போல குட்டி வாசிப்பாளனுக்கு பெரும் உந்துதல்
நிறைய நல்ல நல்ல தகவல்களால் கட்டுப்பட்டுள்ள இந்த கனவுப் படிகட்டுகள் உங்கள் மனக்கட்டில் இருக்க வேண்டிய ஒன்று

