பக்கிரி, ரத்தினம், பழனி, தண்டபானி உள்பட நிறைய நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வினூடே பரந்து விரியும் கிளைக்கதைகள் எல்லாம் கரிசல் காட்டின் விருட்சம்
வெறும்பாறையில் தினம் தண்ணீர் ஊற்றும் ஒருவன் அதற்கான காரணத்தை சாவும் தருவாயில் சொல்லும் போது மனம் விம்மி அழும்…அந்தக் கதையை விவரிக்கும் எஸ்.ராவின் எழுத்து உணர்ச்சி நெருப்பு 🔥
நாதஸ்வர மனிதர் என்றாலே எனக்கு எங்கள் ஊரில் நாதஸ்வரத்தால் வாழ்வில் பொழிந்து… அந்தப் பொழிவு நீடிக்காமல், புத்தியில் பிரச்சனை வந்து, அதன் பின் வாழ்வு ரோட்டுக்கு வந்து, 5-க்கும் 10-க்கும் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, கடைகளில் மீந்த இட்லிகளையும், காய்ந்த தோசைகளையும் உண்டு, பஸ்டாண்டில் படுத்துக் கிடந்து, 70-ஆவது வயதில் மரித்துப் போன அருணாசலம் தான் நினைவுக்கு வருவார். சாவும் நாட்களின் முந்தைய நாட்கள் வரை என் நண்பன் வாங்கிக் கொடுத்த நாதஸ்வரத்தோடே அவர் சுற்றியதாக அறிந்தேன்…
அதேபோல் தவில் அடிப்பவர்கள் என்றாலே….”பெரு வறுமையில் சிக்கி நான்கு பெண் பிள்ளைகளோடு பெரும் அவதிக்குள்ளான சுப்பிரமணியன் அய்யா தான் நினைவுக்கு வருவார். அவரது மரணமும் அவர் மரணத்திற்குப் பின் அவர் குடும்பம் வறுமை பீடித்து ஊரைவிட்டே சென்ற கதையும் ஆறாத்துயரம். (தற்போது அவரது பெண் பிள்ளைகளில் ஒருவர் தன் கணவன் மற்றும் குழந்தைகளோடு காரில் வந்து எங்கள் ஊர் காளியம்மனை தரிசித்துச் சென்றதை காணும் பாக்கியம் கிடைத்தது. இறைவனுக்கு நன்றி. விழுந்த ஊருக்கு அவர் எழுந்த வந்ததை பார்க்குங்கால் ஆனந்தத்தில் இருதுளி கண்ணீரைச் சிந்தினேன்)
பொதுவாக சொந்த அனுபவங்களை கிளறிவிடும் கதைகள் நெஞ்சில் நீங்காமல் தங்கிவிடும். இந்த நாவலும் நாவலில் வரும் சம்பவங்களும் ஒருநாளும் மறக்காது
நம் எல்லாரின் வாழ்விலும் குழல் ஊதுபவர்கள் கொட்டடிப்பவர்கள் நிச்சயமாக கிராஸ் செய்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த நூலில் கண்முன் வந்து போகிறார்கள்…

