நெடுங்குருதி – நூல் விமர்சனம்

களவில் பிறந்த ஊரின் வேரை ஆராய்ந்து அங்குள்ள மனிதர்களின் வாழ்வை அச்சு அசலாக காட்டிய பேரற்புத புனைவு நெடுங்குருதி

சேகரிக்கும் குணமுடைய எறும்புகளை சிறுவன் நாகுவும் ஆதிலெட்சுமியும் பார்த்தும் வியந்தும் விளையாடுவதில் நாகுவின் கதையும் வேம்பலையின் கதையும் துவங்குகிறது.

வேப்பமரமொன்றில் வேம்பலையைச் சேர்ந்த கள்ளர்கள் சிலரை வெள்ளைக்காரர்கள் சுட்டுக்கொன்று தொங்கவிட்ட வரலாறு அந்த வேம்பலைக்கு உண்டு. களவுத்தொழிலை குலத்தொழில் என்பதாக நம்பும் பெருங்கூட்டம் வேம்பலைக் கூட்டம். வெளிச்சத்தை விரும்பாத வேம்பர்கள் வாழ்வில் இருள் தான் வழிகாட்டியாக இருக்கிறது. அவ்வூரில் இருள் கிழித்து வெளிச்சம் பாய்வதற்கு இரண்டு தலைமுறை ஆகிறது. அதுவரை நாம் நாகு வாழ்வோடும், ரத்னாவதி வாழ்வோடும், நாகுவின் அப்பா, அம்மா, தாத்தா, இரு அக்காக்கள், மல்லிகா, சென்னம்மா கிழவி, பக்கீர், பக்கீரின் மனைவி, ஜெயராணி, கோபாலன், வசந்தா, ஜெயக்கொடி, பவுல் ஆகியோரின் வாழ்வோடும் பயணிக்க வேண்டியுள்ளது.

நாவலில் தனித்தனியாக எடுத்து நிறைய அம்சங்களை வியந்தோத முடியும். அதில் சென்னம்மா கிழவி சம்பந்தப்பட்ட ஒரு அத்தியாயம் மிரள வைத்து விட்டது

சென்னம்மா கிழவி வீட்டில் தனியாக கிடக்கும் ஜீவன். மூத்திரம் பெய்வதற்கு மட்டுமே வெளியில் வரும் கிழவி வீட்டில் படுத்தே கிடப்பாள். சிறுவன் நாகுவும், சிறுமி ஆதிலெட்சுமியும் சென்னம்மா கிழவியைப் பார்க்கச் செல்கிறார்கள். அவள் உடம்பு முழுதும் எறும்பு ஊர்கிறது. அவள் மிளா இல்லாமல் கிடக்கிறாள். நாகுவிற்கு அன்றிரவு சென்னம்மா கிழவியை எறும்புகள் தூக்கிச் செல்வதாக கனவு வருகிறது. அடுத்தநாள் சென்னம்மா கிழவியை முழுதுவம் எறும்பு சூழ்கிறது. அவள் மூக்கிற்குள்ளும் எறும்பு ஊர்கிறது. அவள் எதிர்வினையின்றி கிடக்கிறாள். ஆனால் உயிர் இருக்கிறது. இனி அவள் பிழைக்க மாட்டாள் எனத்தெரிய வரும் போது வேம்பலையில் ஒரு சாங்கியம் செய்கிறார்கள். இறக்கும் தருவாயிலுள்ள சென்னம்மாவை ஒருதானிய குலுக்கை ஒன்றிற்குள் வேப்பிலை, உப்பு தண்ணீர் சகிதம் வைத்து சென்னம்மாவை வைக்கிறார்கள். அப்படி வைப்பதற்கு முன்பாக அவள் உடலை தூக்கி வந்து அவள் வாழ்ந்த தெருவை கடைசியாக காட்டுகிறார்கள். இந்த காட்சியை எஸ்.ரா எழுத்தில் வாசிக்கையில் மனம் உடைந்து போனது. சாவிற்காக தானியக்குலுக்கைக்குள் இருக்கும் கிழவி மனம் என்னவெல்லாம் யோசிக்கும்! பல வருடங்கள் கழித்து வேம்பலையில் வீசும் காற்றில் சென்னம்மா கிழவியின் குரல் கேட்கிறது. அவள் சொல்கிறாள். “நான் இறக்கவில்லை. எறும்புகள் என் உடலை பொடியாக உதிர்த்து விட்டது. பொடியாகி நான் காற்றோடு கலந்து விட்டேன். எனக்கு உடல் தான் இல்லை உயிர் இருக்கிறது” எனக்கு எங்கள் ஊரில் வாழ்ந்து தீர்த்த கிழவிகளின் குரல்கள் காதுகளைத் தொட்டது

வேணி, நீலா என இரு அக்காக்களோடு வளரும் நாகுவின் வாழ்விற்குள் அவனது இளம் வயதில் ரத்னாவதி என்ற விலைமாது நுழைகிறாள். ஏனோ நாகுவிடம் அவள் பிள்ளை பெற்றுக்கொள்ள விழைகிறாள். நாகுவும் உடல் தாண்டிய ஒரு உணர்வை அவளிடம் பெறுகிறான். காலம் அவனை மல்லிகா என்ற பெண்ணை மணமுடிக்க வைக்கிறது. ரத்னாவதி நாகுவின் பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது, நாகுவின் மனைவி மல்லிகாவும் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள்.

காவல்துறை வேம்பலை கள்ளர்களை கைரேகைச் சட்டத்தை வைத்து அடக்குகிறது. அடங்க மறுக்கும் வேம்பலை மக்கள் போலீஸ்டேசனையே எரிக்கிறார்கள். போலீஸார் வெகுண்டு எழுகிறார்கள். அதில் நாகு இறந்து போகிறான். நாகுவின் இறப்பிற்கு பின் அவனது பிள்ளைகளின் வாழ்வு வேறு விதமாக விரிகிறது. திருமால் என்ற ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்த ரத்னாவதி மகனை அத்தையிடமும் ஜெயராணியிடமும் ஒப்படைத்து வளர்க்கிறாள். மல்லிகா வசந்தா என்ற பெண்பிள்ளையை தன் மாமனாரின் துணையோடும், அவர் இறந்த பின் தன் பெற்றவர்கள் துணையோடும் வளர்க்கிறார். திருமால் ஒரு திசையிலும், வசந்தா ஒரு திசையிலும் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.

இதுமட்டுமல்ல நாவல். இதற்குள் இன்னும் பல லேயர்களில் நாவல் மிரட்டுகிறது. அழுத்தமான எழுத்து, கிறிஸ்தவ மிஷினரியில் பணி செய்பவர்கள் கம்யூனிசம் கற்றால் என்ன விழைவு வரும் என்ற ஆழமான அரசியல் என மிக நுட்பம் மிகுந்த நூல் இந்த நெடுங்குருதி

ஊரில் காய்ந்து கிடக்கும் வற்றிய கிணறு, தீப்பிடிக்கும் வெயிலில் பறந்து செல்லும் தட்டான், ஊருக்கு வெளியே கருப்பசாமியாக நிற்கும் பனை மரங்கள், மரணித்த மனிதர்களை நினைவுப்படுத்தும் இடிந்து போன வீடுகள். மறந்து போன காதலி, மறைந்து போகாத காதல் என இந்த நெடுங்குருதி என்னை தன் மண்வாசத்தை இன்னும் இழக்காத என் கிராமத்திற்கு கூட்டிச் சென்றது🤍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *