கோயில் யானையின் சிறுவன், மாசி வீதியின் கல் சந்துகள், நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்.
இயக்குநர் சீனுராமசாமி எழுதியுள்ள இந்த மூன்று கவிதை நூல்களையும் வாசித்தேன். கவிதை வாசிப்பு என்றாலே மனம் துள்ளாட்டம் போட ஆரம்பித்துவிடும். காரணம் மிக எளிது. கவிதை நூல்களை சீக்கிரமாக வாசித்துவிடலாம். நவீனக்கவிஞர்கள் குறியீடு, படிமம் என எளிய வாசிப்பை அந்நியப்படுத்தினாலும், பலர் எளிமையாய் கவிதை சொல்வார்கள். கவிதைகளில் உணர்ச்சிகளும் சரி, கவிதை வெளிப்படுத்தும் காட்சிகளும் சரி, சிறிய சொற்களில் நிறைய அனுபவித்த போதையைத் தரும். சீனுராமசாமி எழுதியுள்ள சில கவிதைகளும் அப்படியான உணர்வுகளைத் தருகிறது
“தாத்தா வெங்கலக்கடைத் தெருவில் பெயர் வெட்டி வாங்கியது என்றாள். அடகுக்கடைக்கு அதைக்கொண்டு போக ஏனோ அவளால் முடியவில்லை” என்று மிகமிக எளிமையாக ஒரு கவிதை. எனக்கு என் அம்மாவிற்கு சீதனமாக வந்த வெங்கல கொப்பறையை, எங்க அப்பா முத்துமாமா கடையில் எடைக்குப் போட்ட அன்று என் அம்மா சாப்பிடாமல் தூங்கியது நினைவுக்கு வந்தது. தாய்வீட்டு சீதனப்பெருமை முன் வறுமை பெரிதாக தெரிவதில்லை பெண்களுக்கு
‘என்னிடம் எதுவுமில்லை. உண்மையில் இருப்பதெல்லாம் வந்துவிடும் என்ற துடிப்பைத் தவிர’ என்ற கவிதை வரிகள் எளிதில் உடையும் யாருக்கும் உத்வேகம் தரக்கூடியவை
“நாம் எடுத்துச் சேர்க்கும் புகைப்படங்களில் எந்த புகைப்படம் நமது கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு வரும்?” என்ற கேள்வி தொனிக்கும் ஒரு கவிதை, சட்டென்று வாழ்வின் நிலையாமையை எண்ண வைத்தது. எந்த மனிதனாலும் பதில் சொல்ல முடியாத கேள்வி இது.
வாழ்வை நிர்ணயம் செய்ய முடியாத மனிதன் மரணத்தையும் அதற்குப் பின் நடக்கும் சம்பவங்களையும் எப்படி கணிக்க முடியும். எங்கள் ஊரில் வாழ்ந்த சண்முகதாத்தா என்றொருவர். வாழும்போதே அவருக்கு கல்லறை எழுப்பிக்கொண்டார். கல்லறை கட்டி முடித்த அன்று அவர் எங்கள் டீக்கடையில் டீ குடித்தபடியே சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது
“இங்கேரு பொத்தமாடா. தாத்தா நோயில்லாம தான் சாவேன். செத்தன்னைக்கி குழிதோண்ட ஆளு கூப்பிடணும், வெட்டுதவனுக்கு குடிக்க சாராயம் வாங்கி குடுக்கணும். இந்த எமத்துலாம் எதுக்கு? தாத்தா செத்ததும், மகாலிங்கத்தை கூப்டு நாலு தடவை சங்க ஊதச்சொல்லணும். எம்மக்க இங்குன தான் இருக்குவ. டான்னு வந்ததும், அந்தால இன்னா நான் படுக்க இந்த கட்டில்ல வச்சே தூக்கிட்டுப் பேருங்க. என் சமால்ல மூடிருக்க கல்ல லேசா ரெண்டு தட்டு தட்டி, பேத்தெடுத்துட்டு, அப்படியே என்ன உள்ள வச்சிரணும். பெறவு மண்ணு போடாம ரெண்டு மூட்ட உப்ப போட்டு பெதைக்கணும் கேட்டியா? கட்டுப்பாடோட காத்த உடம்புடே.. ஒரு பத்துநாளாவது பூத்துப் பேரப்புடாதுல்லா?” இப்படி தன் சாவைப் பற்றி பெருமிதமாக பேசிய சண்முக தாத்தாவிற்கும் நினைத்தது போல, சாவு எளிதாக அமையவில்லை. உடல் மீது கடும்பிரயத்தணம் கொண்ட அவரை நோய் பின்னியெடுத்தது. தீரா வாதை கண்டே மரணித்தார். உப்பு போட்டு அவரை புதைக்கும் போது, அவர் உடல் ஏற்கெனவே பூத்துவிட்டது தெரிந்தது.
வாழ்வைச் சொல்லித் தரும் கவிதைகள் மட்டுமல்ல, சாவை அடையாளப்படுத்தும் கவிதைகளும் வேண்டும் தானே. வாழ்வின் எத்தகைய அங்கம் மரணம்!
சீனுராமசாமி இயக்குநர் என்பதால் கவிதை வரிகளில் காட்சிகள் அத்தனை அழகாய் நம் கண்முன் விரிகின்றன
சிற்சில கவிதைகளுக்கு பெரிய அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்க முடியாவிட்டாலும்,சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் போது ஏற்படும் உணர்வுகளை சில கவிதைகள் ஏற்படுத்தின

