ரத்த கிரவுண்டில் நடக்கும் துரோக கபடியே இந்தப் பல்டி
ஷேன்நிகம், சாந்தனு இன்னும் இரு இளைஞர்கள். இவர்கள் நால்வரும் கபடி ப்ளேயர்கள். இவர்களில் சாந்தனு மட்டும் பணம் விரும்பி. ஊரின் பெரும் வட்டி தாதாவான செல்வராகவன் வலையில் எளிதாக விழுகிறார் சாந்தனு. மேலும் தன் நண்பர்களையும் உள்ளிழுக்கிறார். செல்வராகவனுக்கு எதிராக ஏரியாவில் இன்னொரு வட்டி தாதா இருக்கிறார். இவர்களின் பஞ்சாயத்திற்குள் இந்த நால்வர் அணி சிக்குகிறது. அடைக்கலம் புகுந்த இடத்திலே நால்வருக்கு எதிராக பெரும் படைக்களம் கிளம்ப, ஹீரோஸ் ஆன ஷேன்நிகம், சாந்தனு உள்பட நால்வரும் தப்பித்தார்களா என்பதே படத்தின் கதை
நாயகன் ஷேன்நிகத்தின் 25-ஆவது படமிது. காதல், எமோஷ்னல், ஆக்ஷன் ஆகிய காட்சிகளில் பொறி பறக்கும் நடிப்பால் கவர்கிறார். நம்மூர் சாந்தனு ஆகச்சிறப்பாக நடித்துள்ளார். நம்மூர் இயக்குநர்கள் யாரும் சாந்தனுவிற்கு இப்படியொரு நல் வாய்ப்பை இதுவரை வழங்கியதில்லை. மனிதர் கிடைத்த கிரவுண்டில் ஆல் ரவுண்டராக கப் வாங்குகிறார். செல்வராகவன் கேரக்டரில் சற்று செயற்கைத் தனம் தெரிகிறது. அல்போன்ஸ் புத்ரன் நல்ல நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்.
இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் சண்டைக்காட்சிகள் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தரமாக வாசித்துள்ளார். பாடல்களும் வைப் மெட்டிரியல்ஸ் தான். ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே.புலிக்கல் கேமராவை வைத்து கோரத்தாண்டவம் ஆடியுள்ளார். சண்டைக்காட்சிகளில் சுழலும் அவரது கேமரா வேறலெவல் எக்ஸ்பிரீயன்ஸை தருகிறது. ஒளிப்பதிவாளரின் நேர்த்திக்காகவே இப்படத்தை ஒருமுறை காணலாம்.
ஒவ்வொரு கேரக்டர்களின் பின்புலம், பண்பு என பொறுமையாக அறிமுகப்படுத்தி கதைக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம். ஒவ்வொரு கேரக்டர்களுக்கான நோக்கத்தை தெரிவித்து, அதன்பின் அவர்களுக்குள் வலுவான கான்பிளிட்-ஐ கொண்டு வந்து நிறுத்தியது வரை படம் பட்டாசு தான். இடைவேளைக்குப் பின் சில சறுக்கல்கள் இருந்தாலும் துளியும் போரடிக்காத ஸ்கிரீன் ப்ளே படத்திற்கு பெரும் ப்ளஸ். படம் பின்பாதியில் கொஞ்சம் பல்டி அடிக்கிறது தான். ஆனாலும் மேக்கிங்கில் கில்லியா தெறிக்கிறது இந்த பல்டி
3/5
-வெண்பா தமிழ்

