சர்வதேச எழுத்தாளர்கள் சந்திப்பிற்காக அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகம் எழுத்தாளர் அசோகமித்திரனை அழைக்கிறது. அவ்வழைப்பின் பெயரில் அங்கு செல்லும் அசோகமித்திரனுக்கு கிட்டிய அனுபவங்கள் தான் ஒற்றன் என்ற நாவலாக முகிழ்த்துள்ளது
தன்னோடு அறையில் தங்கியுள்ள சக எழுத்தாளர் பூண்டு காதலர். அசோகமித்திரனுக்கு அந்த வாடை அறவே ஒப்பவில்லை. அதை ஒருமுறை குறிப்பிடுகிறார். மறுமுறையும் அதைக்குறிப்பிடும் போது மனக்கசப்பு மேலிடுகிறது. இருவரும் ஒரே அறையில் தான் வசிக்கிறார்கள். ஆனால் மனதிற்குள் எதையெதையோ வாசிக்கிறார்கள். இத்தனைக்குப் பின்பும் இருவரும் எதிரெதிரே அமர்கிறார்கள். தயக்கம் உடைத்துப் பேசிக்கொள்கிறார்கள். திடீரென்று அந்த பூண்டு காதலருக்கு போன் வருகிறது அம்மாவிற்கு சீரியஸ் என. அவர் தன் அம்மாவை நினைத்து கலங்குகிறார். “நான் வெளியே சென்று வருகிறேன். எனக்குப் போன் வந்தால் 5.30க்கு திரும்பவும் அழைக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். போன் வரவேயில்லை. அவர் அறை திரும்புகிறார். சரியாக போன் வருகிறது. போனில் வந்த தகவல் அவரின் அம்மாவிற்கு உயிர் பிரிந்துவிட்டது என்பதாக இருக்கிறது.
உடைந்து நொறுங்கும் அவரை அசையவிடாமல் இறுகக்கட்டிப் பிடித்துக்கொள்கிறார் அசோகமித்திரன்.
அவரின் கண்ணீர் அசோகமித்திரனின் தோள்பட்டையை முற்றாக நனைக்கும் வரை தன் அணைப்பிலிருந்து அவரை விடுவிக்கவில்லை. வாழ்வில் உன்னை மறக்க மாட்டேன் என்கிறார் அவர். நிச்சயமாக அவர் என்னை மறக்க மாட்டார். என்று இந்த அத்தியாயத்தை முடிக்கும் அசோகமித்திரன் இப்போதும் அவரிடம் பூண்டு வாடை இருந்தது என்கிறார். உடனிருப்பவர் நம் உள்ளம் கலந்தபின் அவரிடம் நாம் பிடிக்காததாக பார்த்த ஒன்று கூட நம் மனதால் மறு பரிசீலனைச் செய்யப்படுகிறது. இதுதான் மனதின் நியதி போல. இறுக்கமான சூழலைக் கடக்க இயலாதவனு(ள) க்கு நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளிக்கும் ஒரு சொல்லோ..ஒரு அணைப்போ போதும். அது நிச்சயமாக நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்
அசோகமித்திரனின் அனுபவங்களில் இதுவொரு சாம்பிள். நிறைய ரகளையான அனுபவங்கள் வாசிப்பிற்கு சுவை சேர்க்கிறது
தான் மணமுடிக்க நினைத்த தன் காதலன் ஏற்கெனவே மணமானவன் என்ற தகவல் தெரிந்து இலாரியா உடைந்ததைச் சொல்கிறாள். அந்த இடத்தில் அசோகமித்திரன் சொல்லிய ஆறுதல் மொழிகள் ஆதுரமானவை. துக்கத்தை பங்கிட்டுக் கொள்ள முடியாது. ஒருவர் துய்க்கும் துக்கம் அவரால் மட்டுமே செரிக்க கூடியது. அதே சமயம் ஒருவள் துக்கத்தோடு மட்டுமே பயணிப்பது நமது நல் பயணத்தைத் தடுக்கும் என்கிறார் அசோ. க்ளாஸிக்!
வாழ்வே ஒரு பயணம் என்பதால், கிடைக்கும் சின்னச் சின்னப் பயண வாய்ப்பைக் கூட நாம் தவறவிடக்கூடாது.
பயணங்களில் கிடைக்கும் பாடங்கள் தான் நம் வாழ்வின் பலன்கள்

