லோகா சேப்டர்1 சந்திரா- விமர்சனம்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் கதை என்ற பெருமையைத் தட்டியிருக்கிறது லோகா

150 வருடங்களுக்கு மேல் மரணமடையாமல் அதே இளமையோடு இருக்கிறார் நாயகி கல்யாணி. அதற்கான காரணமாக ஒரு ஆகச்சிறந்த பின்கதை உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த கல்யாணி தீயவர்களிடம் மட்டுமே தன் பவரை காட்டுவார். நாயகன் நஸ்லின் கல்யாணியை காதலியாக்க முயல்கிறார். பின் கல்யாணி சாதாரண பெண் அல்ல என்று தெரிந்ததும் வேறோர் முடிவை எடுக்கிறார். ஒரு கட்டத்தில் கல்யாணி மீது அவருக்கு நிஜமான பிரேமம் ஏற்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு ஒரு எமோஷ்னல் தொடர்ச்சி வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர். மேலும் கல்யாணி மட்டுமல்லாது இன்னும் சிலரும் இப்படியான யட்சி போன்ற சக்தி கொண்டவர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கல்யாணிக்கு மேல் ஒரு டீம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான தீர்வும் தீர்ப்பும் என்ன என்பதை அடுத்தடுத்த பாகங்களில் எதிர்பார்க்கலாம் போல

நாயகியாக கல்யாணி. தரமாக நடித்துள்ளார். காதல் ததும்பும் முகத்தில் தான் எவ்வளவு ரெளத்திரமும் ரத்தமும் தெறிக்கிறது. நிஜமாகவே பட்டயக்கிளப்பியுள்ளார் கல்யாணி. நஸ்லின் மிக மெல்லின நாயகனாக நம் மனம் கவர்கிறார். கெஸ்ட் ரோலில் வரும் டொவினோ தாமஸ் வழக்கம் போல ஈர்க்கிறார். End card போட்ட பிறகு தான் துல்கரின் என்ட்ரி. But அதுதான் மாஸ் மெட்டிரியல். நம்மூர் சாண்டிக்கு வேறலெவல் கேரக்டர். மாஸ்டர் நடிப்பில் பிரித்தெடுத்துள்ளார்

படத்தின் ஆன்மாவாக ஜாக்ஸ் பிஜாயின் இசை இருக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் நல்லதொரு உணர்வெழுச்சியைக் கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மிரட்டியுள்ளார் வரகலையிலும் படம் நேர்த்தியாக வந்துள்ளது

சூப்பர் ஹீரோயின் கதையாகவே இருந்தாலும் அந்த சூப்பர் பவருக்குப் பின்னால் ஒருவலி நிறைந்த வாழ்வைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் டொமினிக் அருண். “நீ இதைத் தொட தகுதியற்ற பிறப்பு” என்று அதிகாரம் மிரட்டினால், காலம் ஒடுக்கப்பட்ட பிறப்பைக் கொண்டு அதிகாரத்தை சாட்டையால் அடிக்கும் என்பதைக் காட்சி மொழியில் சொல்லியுள்ளார் இயக்குநர். மேலும் தொன்மக் கதையிலும் கூடுமான வரை அறிவியலையும் புகுத்தியுள்ளார். முன்பாதி கொடுத்த ஆச்சர்யத்தை பின்பாதியில் சில இடங்கள் தரத்தவறினாலும் படத்தின் முடிவு “அடுத்த பார்ட் எப்போ பாஸ்?” எனக் கேட்க வைக்கிறது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் AGS நிறுவனம் லோகாவை மிகச்சிறப்பாக தமிழ்ப்படுத்தி பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளனர். கல்பாத்தி அர்ச்சனா & டீமிற்கு வாழ்த்துகள்

நாம் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நேர்மை செய்கிறாள் இந்த லோகா
3.75/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *