வீர வணக்கம்- விமர்சனம்

மனிதர்களின் தோலுரித்த கொடுங்கோன்மைக்கு எதிராக ஒன்றிணைந்த தோழர்களின் வரலாற்றைப் பேசுகிறது வீரவணக்கம்

தமிழ்நாடு கேரள எல்லைப்பகுதியில் சுதந்திரத்திற்கு முன்பாக பண்ணை முதலாளிகள் ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு நிகழ்த்திய கொடுமைகள் எண்ணிலடங்காதது. அந்தச் சம்பவங்களை அடிப்பையாக வைத்து படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. இன்றும் ஆணவக்கொலைகளும் ஒடுக்குமுறைகளும் நடக்கும் ஊர் ஒன்றிலிருந்து இந்தக் கதை துவங்குகிறது. இடைநிலைச் சாதியைச் சேர்ந்த பரத்தின் பாட்டி சொல்லும் வரலாறு 1945-ஆம் ஆண்டை நோக்கிச் செல்கிறது. 1945-ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சமுத்திரக்கனி எப்படியெல்லாம் குரல் கொடுத்து எதையெல்லாம் எதிர்கொண்டார் என்பது படத்தின் திரைக்கதையாக விரிகிறது

கதையின் நாயகனாக சமுத்திரக்கனி தோழராகவே வாழ்ந்துள்ளார். மக்களுக்கான போராட்டத்தில் தனிப்பட்ட வாழ்வை இழந்த தோழர்கள் அநேகம்பேர்கள். அவர்களை திரையில் அழகாக பிரதிபலித்துள்ளார் கனி! பரத்திற்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. பரணி ஓரளவு கவனம் ஈர்க்கிறார். ஏனைய நடிகர்களில் சிலர் கவனம் ஈர்க்கின்றனர். பலர் செயற்கையான நடிப்பையே தந்துள்ளனர்

படத்தில் உணர்ச்சித் ததும்பும் காட்சிகளுக்கு நல் இசையமைக்கும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டுள்ளார் இசையமைப்பாளர் MK அர்ஜுனன். பாடல்களும் ஒகே ரகம் தான். ஒளிப்பதிவாளர்கள் கவிரயசு, சீனு சித்தார்த் இருவரும் அழகான ப்ரேமிங்ஸால் படத்தை அழகு படுத்தியுள்ளனர்

மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் கலையில் செயற்கைத் தன்மை மிகுந்தால் நிச்சயமாக அந்தக் கலை போதிய உணர்வெழுச்சியைத் தராது. கெடு வாய்ப்பாக இந்தப் படத்தில் செயற்கையாக தோன்றும் காட்சிகள் நிறைய. வெறும் காட்சிகளின் தொகுப்பாய் மாறிப்போன திரைக்கதை வீர வணக்கத்தோடு இணக்கத்தை ஏற்படுத்த மறுக்கிறது.

ஆக்கத்தில் குறையுள்ள இப்படத்தில் நோக்கம் நல்லதாக இருப்பதால் ஒரு சிகப்பு வணக்கத்தை வைக்கலாம்
-வெண்பா தமிழ்
3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *