மாமன்- விமர்சனம்

விட்டுக்கொடுத்துப் போகும் உறவுக்கு மட்டுமே வலிமை அதிகம் என்கிறார் இந்த மாமன்.

சூரியின் சகோதரி சுவாசிகாவிற்கு பத்து வருடங்களாக குழந்தை இல்லை. ஒரு கட்டத்தில் அவர் கருவுருகிறார். ஒரு ஆண்மகன் பிறக்கிறான்..தாய்மாமனான சூரி, அந்தக் குழந்தை “தரையில நடக்க விடாமல் தன் தலையில் நடக்க விடுகிறார்”. சூரியின் குடும்பப்பாசத்தை பார்த்து நெகிழ்ந்து அவர்மேல் காதல் கொள்கிறார் மருத்துவரான ஐஸ்வர்யா லெட்சுமி. எந்தப் பாசம் அவரைக் காதலிக்க வைத்ததோ..அந்தப் பாசமே சூரியை வெறுக்கவும் வைக்கிறது. அதன்பின் இந்த எமோஷ்னல் ட்ராமாவில் என்ன நடக்கிறது என்பதே கதை.

கதையின் மாமனாக சூரி. மதுரையின் ஒரு பாசக்கார தாய்மாமனை கண்முன் நிறுத்துகிறார். சிங்கிள் ஷாட் எமோஷ்னல் காட்சிகளிலும் சூரி அதகளம். ஐஸ்வர்யா லெட்சுமி கிடைத்த வெளியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். படத்தின் பிரதான நாயகி போல நடிப்பால் ஜொலிக்கிறார் சுவாசிகா. நாத்தனார் முகபாவனைகளும், ஈகோ சீண்டலுமாய் அவர் காட்டியுள்ள பெர்பாமன்ஸ் மாமனுக்கு பெரிய மைலேஜ். கீதா கைலாசம், பால சரவணன், ராஜ்கிரண், மருமகனாக வரும் சிறுவன் என அனைவரும் எதார்த்தம் மீறாத நடிப்பால் மனதில் நிற்கிறார்கள்.

படத்தில் இசை ஒரு ரோல் ப்ளே செய்கிறது. மாமன் பாடலும் சரி, பின்னணி இசையும் சரி படத்திற்கு சப்போர்ட் செய்துள்ளது. கண்ணைப்பறிக்காத அளவில் கலர்புல் ஒளிப்பதிவும் படத்தின் மற்றொரு எனர்ஜி.

அக்கா தம்பி செண்டிமெண்ட், மாமன் மருமகன் செண்டிமெண்ட், கணவன் மனைவி செண்டிமெண்ட் என படத்தில் நிறைய செண்டிமெண்ட். தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் படி, ஏற்றுக்கொள்ளும் அளவில் வைத்தால் எல்லாச் செண்டிமெண்ட்ஸும் எடுபடும். அந்த வகையில் மாமன் பார்டரைத் தாண்டிவிடுவார். அதே நேரம் கதையை நகர்த்த வேண்டுமென்றே வளர்க்கப்படும் கேரக்டர்கள், கான்பிலிட்க்காக வைக்கப்பட்டுள்ள காட்சிகள், பின்பாதியில் தூவப்பட்ட ஓவர் டோஸ் வசனங்கள் படத்தைத் துருத்தவே செய்கின்றன.

கணவனாகப் பட்டவனுக்கு தன் அக்கா தன் மருமகன் எவ்வளவு முக்கியமோ,அதேயளவு தன்னை நம்பி வந்த மனைவியும் முக்கியம் என்பதை படம் மிக முக்கியமாகப் பேசியுள்ளது. தன் பாசத்தை நிரூபிக்க மற்றவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்ற கருத்தைப் பேசியுள்ள மாமன், இன்றைய 2K கிட்ஸுக்கும் தேவையானவர் தான்.

3/5

  • வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *