குபேரா- விமர்சனம்
இந்த உலகம் எல்லோருக்குமானது என்பதை உரக்கச் சொல்கிறார் இந்தக் குபேரா
இந்தியப் பகுதிக்கு உட்பட்ட கடலில் மிகப்பெரிய அளவில் ஆயில் எடுக்க முடியும் என்ற நிஜத்தைக் கண்டறிகிறார் வில்லன். அதை தன் வசம் வைத்துக்கொண்டு கவர்மெண்டுக்கு விற்பதற்கு அமைச்சரிடம் டீல் பேசுகிறார். அதற்கு கையூட்டாக ஒரு லட்சம் கோடி கேட்கிறார் மினிஸ்டர். அந்த ஒரு லட்சம் கோடியை கை மாற்றுவதற்காக சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவை நாடுகிறார் வில்லன். நாகர்ஜுனா இந்தப் பணத்தை safe ஆக கை மாற்றுவதற்கு எந்த அடையாளமும் அற்ற, படிப்பறிவில்லாத பிச்சைக்காரர்கள் வேண்டும் என்கிறார். அதன்படி நான்கு பிச்சைக்காரர்களைக் கொண்டு வருகிறது வில்லன் டீம். அந்த நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவர் தனுஷ். இம்மாம் பெரிய கொள்ளைக்கூட்டத்திற்கு நடுவே வெள்ளை உள்ளம் கொண்ட தனுஷ் எப்படி குபேரா ஆகிறார் என்பது படத்தின் மீதிக்கதையாக இருக்கிறது
கதாநாயகன் தனுஷ் ஹீரோ என்ற சட்டையைத் தூக்கி கடாசிவிட்டு, கதையின் நாயகனாக பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியுள்ளார். நடிப்பில் தானொரு அட்சயப்பாத்திரம் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவுகிறார் தனுஷ். இப்படி அர்ப்பணிப்பு மிக்க துணிச்சலான கலைஞனை சினிமா நிச்சயமாக கொண்டாடும். நாகார்ஜுனா குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். எளிய பின்னணி உள்ள பெண்ணாக ராஷ்மிகா மனதில் பதிகிறார். வில்லனாக வரும் ஜிம் சர்ப் படத்தின் பெருந்தூண் எனலாம். தனது கேரக்டரை அவ்வளவு சிறப்பாக உள்வாங்கி நடித்துள்ளார். சாயாஷி ஷிண்டே உள்பட மற்றும் பலர் படத்தில் ஸ்கோர் செய்துள்ளனர்
படத்தின் பெரும்பாலான காட்சிகளை Take up செய்துகொள்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். பாடல்களும் கதையோடு பொருந்தியே வருகிறது. ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி மிகச்சிறந்த உழைப்பைக் கொட்டியுள்ளார். ரிச் ஆன இடங்களைக் காட்டும் போதும், poor ஆன இடங்களைக் காட்டும் போதும் பாரபட்சமின்றி அவரின் கேமரா சுழல்கிறது. எடிட்டர் டேபிளில் இன்னும் வேலை இருக்கிறது என்றாலும் வந்திருக்கும் அவுட்புட் தரம்
“பொழைக்கிறதுக்குத் தான் வாழணும்” என்ற வசனம் ஜெயகாந்தன் எழுதிய “நான் இருக்கிறேன்” என்ற சிறுகதையை நினைவூட்டியது. இந்த உலகில் வாழச்சொல்லிக் கொடுக்கும் மனிதர்கள் கிடைப்பது வரம். அப்படி வாழ்வைச் சொல்லிக்கொடுப்பவராக ஹீரோ அமைந்திருப்பது சேகர் கம்முலாவின் ரைட்டிங் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்துகிறது. பிச்சைக்காரர்களின் வாழ்வையும் அவ்வாழ்வின் அகபுற நெருக்கடிகளையும் திரைக்கதையின் வழியே துருத்தாமல் சொல்லியுள்ளார் இயக்குநர் சேகர் கம்முலா. “பிழைத்தல் வேறு வாழ்தல் வேறு” என்பார் ஜெயமோகன். “மற்றவரின் வாழ்விற்காக எளியவர்களின் பிழைப்பைக் கெடுக்கக் கூடாது” என்கிறது இந்தப்படம். இரண்டாம் பாதியில் சற்று மெதுவாக நகரும் திரைக்கதைக்கு ரசிகர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டால் ஒரு பேரனுபவமிக்க நல்ல சினிமா உங்களுக்குக் காத்திருக்கிறது. Yes உறுதியாக குபேரா நல்ல சினிமா
4/5
-வெண்பா தமிழ்

