கருப்பு- விமர்சனம்

தீர்ப்பு வழங்குற கோர்ட்டுக்குள்ள நியாயம் கேட்டு சாமி இறங்குனா என்னாகும்? இதான் கருப்பு படத்தோட ஒன்லைன்

ஆர்.ஜே பாலாஜி ஒரு பிரபலமான வக்கீல். அவருக்கு நீதி நியாயம்லாம் கிடையாது. அப்பாவிகளாகவே இருந்தாலும் வயிற்றிலடிக்கும் கொடூர வக்கீல் அவர். கேரளத்திலிருந்து தன் மகளின் சிகிச்சைக்காக சென்னை வரும் இந்திரன்ஸ் மற்றும் அவரது மகளிடம் ஒரு கும்பல் நகைகளை கொள்ளையடித்து விடுகிறது. அந்த நகைகளை மீட்டுக்கொடுப்பதாக உறுதியளிக்கும் ஆர்.ஜே பாலாஜி அநியாயமாக அவர்களை அலையவிட்டு பணம் பறிக்கிறார். மேலும் நேர்மையின்றி பல வழக்குகள் தேங்கிக்கிடக்க, இந்த வழக்குகளுக்கு நியாயம் கேட்டு வருகிறார் கருப்பு சாமி! யெஸ் சூர்யா தான் அந்த சாமி! சாமியின் வேட்டையில் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி திரைக்கதை

ஹீரோவாக வழக்கம் போல் மாஸ் காட்டுகிறார் சூர்யா! சாமியாக நடிப்பதற்கு பேய் உழைப்பைப் போட்டுள்ளார். ஆர்.ஜே பாலாஜி வில்லனாக பார்டரை தாண்டிவிடுகிறார். பகத்பாசில் போன்ற நடிகர் செய்ய வேண்டிய கேரக்டர். எப்படியோ சமாளித்து விட்டார். திரிஷாவிற்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. அவருக்கு வழங்கப்பட்ட டப்பிங் குரலும் செட்டாகவில்லை. ஸ்வாசிகா கேரக்டரும் அவரது நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. மலையாள நடிகரான இந்திரன்ஸ் படத்தின் முன்பாதியை தனது அட்டகாசமான நடிப்பால் தாங்கியுள்ளார். அவரது மகளாக நடித்தவரும் ஆகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். நட்டி கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை

சாய் அபயங்கர் இசையில் வரும் கருப்ப சாமி பாடல் சிறப்பு. இன்னும் அப்பாடலை சத்தத்தை குறைவாக ஒலிக்கவிட்டு ரசிக்க வைத்திருக்கலாம். பின்னணி இசை பக்கா பேங்கர். GK விஷ்ணு தன் ஒளிப்பதிவால் படத்தின் விஷுவலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா சுற்றிச்சுழல்கிறது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். மேலும் வெறும் வாதங்களால் எளிய மக்கள் துண்டாடப்படுவதையும் படத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி. முன்பாதியில் கோர்ட்டிலிருந்து நகைமீட்கும் நடைமுறைகளை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. கடவுளிடம் சத்தியம் வாங்கிவிட்டால் கடவுள் அநியாயம் நடந்தாலும் அப்படியே சும்மா இருப்பார் என்ற லாஜிக் லைட்டா உதைக்கிறது. மேலும் சூர்யாவிற்கான இருப்பை இன்னுமே இயக்குநர் அதிகப்படுத்தியிருக்க வேண்டும். படமெங்கும் வரும் விஜய் ரெபரன்ஸ் கொஞ்சம் ஆசுவாசம் அளிக்கிறது. பின்பாதியில் வரும் காமெடி காட்சிகள் ஆக்சன் காட்சிகள் ஆகியவையால் எமோஷ்னல் அற்ற திரைக்கதை தப்பித்து விடுகிறது. கெடா விருந்து இல்லாவிட்டாலும் திருவிழா உணர்வை தருகிறார் கருப்பு
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *