‘பிக் பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ ஜின் -தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
நடிகர் முகேன் ராவ் பேசுகையில்,
”இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இயக்குநர் டி ஆர் பாலா உடன் ‘ஒற்றைத் தாமரை’ என்ற வீடியோ ஆல்பத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். என்ன தேவை என்பதில் அவரிடம் ஒரு தெளிவு இருக்கும். இந்த ‘ஜின்’ படத்திலும் அவருக்கு என்ன தேவையோ அதனை நடிகர்களிடமிருந்து பெற்றார். அவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். இதற்காகவே அவரை நான் மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருடன் தொடர்ந்து பயணிக்கவும் விரும்புகிறேன்.
இயக்குநரின் பெற்றோர்களான வேந்தன்-ராஜேஸ்வரி தம்பதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து கலைஞர்களையும் அக்கறையுடன் கவனித்தனர். தொடக்கத்தில் விவேக் மெர்வின் என்பது ஒருவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தான் அவர்கள் இருவர் என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இயக்குநர் டி ஆர் பாலாவிற்கும், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும் இடையேயான நட்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஏராளமான திரைப்படங்களை பார்த்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் சண்டை காட்சிகளின் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு சண்டையிலும் ‘ஜின்- தி பெட்’டிற்கு தான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு நான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். சில படங்களின் பணிகள் நிறைவடைந்து இருப்பதால் அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜின்-னும் ஒரு கதாபாத்திரம் தான். அவரும் இங்கு எங்கேயோ தான் இருப்பார். அவருக்கும் நான் நன்றியை சொல்கிறேன். இந்த ‘ஜின் தி பெட்’ படத்தின் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. அனைவரும் மே 30ம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

