ஞானக்கூத்தன் கவிதைகள்- நூல் விமர்சனம்

ஞானக்கூத்தன் கவிதைகளை இப்போது தான் வாசிக்கிறேன். முழு தொகுப்பு என்பதால் 700-க்கும் மேற்பட்ட கவிதைகளை வாசிக்க முடிந்தது.

பிள்ளையார் பற்றி எழுதுகிறார்

“மனிதர் போற்றும் சாமிகளில் ஒற்றைக் கொம்புக் கணபதியை எனக்குப் பிடிக்கும்.
ஏனெனில் வேறெந்தத் தெய்வம் வணங்கியபின் ஒப்புக்கொள்ளும் நாம் உடைக்க” என்ற பகடியில் செல்லும் ஞானக்கூத்தன்

“தூக்கம் வரைக்கும் யாவரும் சித்தர்
தூக்கத்துக்கப்புறம் யாருடா சித்தர்?” என்ற தத்துவார்த்த கேள்விக்குள் செல்கிறார்.

“ஊர் புகழும் மார்கழியை ஏன் டிசம்பர் கைவிட்டுப் போகிறது?” என்று ஒரு கவிதையில் கேட்கிறார்

நத்தை சுமக்கும் ஓட்டுப்பாரத்தை ஏசுவின் சிலுவையோடு ஒப்பிட்ட ஒரு கவிதை மிகவும் பிடித்தது. அந்தக் கவிதையில் ஏசுவின் சிலுவையை சுமக்க விரும்பி வாங்குகிறார் ஞானக்கூத்தன். அது கனமாக இல்லாமல் இலகுவாக இருக்கிறது. அந்தச்சுமையைத் தான் ஆல்ரெடி ஏசு சுமந்துவிட்டாரே என்று கவிதையை முடிக்கிறார். “நம் சோகத்தை சுமப்பதாய்ச் சொல்லும் பிறருக்கு, நமக்குப் போன்ற வலி இருக்காது” என்ற நிதர்சனத்தை எறிந்துச் சென்றது இந்தக் கவிதை

கெய்வின் குலியேவ் எழுதிய ரஷ்யக்கவிதை ஒன்றை மொழிபெயர்த்துள்ளார் இப்படி,👇

“ஒவ்வொரு ஜீவனும் தனக்கென ஒரு துயரைக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு பறவைக்கும் பறப்பதற்கு ஒரு தூரம் இருக்கிறது.
கடல் இருக்கிறதே என்பதற்காக
ஓடை வற்றிவிட வேண்டுமா என்ன?”

“அவன் செய்வதை நான் ஏன் செய்யவேண்டும் என்ற கேள்வியில் தோல்வியின் பாதை தெரிகிறது. அவன் செய்வதையே நானும் செய்வேன் வேறுமாதிரி” என்பவர்க்கு” வெற்றிக்கான பாதை துலங்குகிறது

“எத்தனை நேரம் தான் நீடிக்கும் சொல்லுங்கள்…
ஒரு விற்பனைப் பெண்ணின் சிரிப்பு” கண நேரத்தில் மனதை உடைத்துப் போட்டது இந்தக்கவிதை.

ஞானக்கூத்தன் அவர்களின் கவிதைப்பார்வை மிகவும் எளிமையானது. அதேசமயம் கூர்வாளின் கூர்மை கொண்டதும் கூட. கவிதைகளில் ராமாயண ரெபரன்ஸ், மகாபாரதம், திருமறைகள், நகுலன், நகுலனின் நாயகி சுசீலா ஆகியோரின் ரெபரன்ஸும் வருகிறது. ஆக பரந்த வாசிப்பனுபவம் உள்ளவர்களை இந்த மாதிரி கவிதைகள் பலமாக ஈர்க்கும்

நிறைய கவிதைகளுக்குள் கதைகள் இருந்தன. ஒரு சிறவனிடம் ஒரு இளம் வயதுக்காரர் ரெயில் பற்றி விவரிக்கிறார். “ரெயிலில் ஏசி உண்டு. தலையனை தருவர், பெட்ஷீட் உண்டு” என்று அடுக்குகிறார். கேட்டுக்கொண்டிருந்த சிறுவன், “பாத்ரூம் உண்டுமா?” என்று கேட்கிறான். யெஸ் உண்டு என்கிறார். “என் அம்மா அதன் பக்கத்தில் தான் உட்கார்வாள்” என்கிறான் சிறுவன். சொல்லிக் கொண்டிருந்தவருக்கு தான் பார்க்கும் ரயில் வேறு, அவன் பார்த்த ரயில் வேறு என்ற நிஜம் வலிக்கிறது. இந்தக் கவிதையை வாசித்ததும் எனது பால்யகாலம் நினைவில் வந்தது. ரயிலில் ரிசர்வேர்சன் கோச் இருக்கு என்பது கூட என் முதல் பிரயாணத்தில் எனக்குத் தெரியாமல் இருந்த காலம் அது

நிறைய நினைவுகளை கிளறி பழைய உணர்வுகளுக்குச் செல்ல வைத்த கால ரயில் இந்தக் கவிதை நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *