தேவாவின் மறக்க முடியாத பாடல்களுக்கு போட்டியாளர்கள் இசை அஞ்சலி – நெகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த் தேவா ஆகாஷுக்கு தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்!
தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணத்தையும், அவரது இசைப் பாரம்பரியத்தையும் கொண்டாடும் வகையில் சோனி விழாவின் தமிழ் ஐடல் நிகழ்ச்சியில் சிறப்பு இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நடுவர்களான கார்த்திக், பென்னி தயாள் மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமியாவுடன் இணைந்து அவர் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். தேவாவின் புகழ்பெற்ற பாடல்களைப் போட்டியாளர்கள் தங்களது தனித்துவமான பாணியில் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஆகாஷ் பாடிய பாடல் ஸ்ரீகாந்த் தேவாவை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அவரது பாடலைப் பாராட்டி மேடைக்கு வந்த ஸ்ரீகாந்த் தேவா, ஆகாஷைக் கட்டித்தழுவி, தான் அணிந்திருந்த சொந்தக் கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கினார். ஆகாஷின் குரலை ஆண்ட்ரியா பாராட்டியதுடன், அவரது பாடலில் வெளிப்பட்ட உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை பென்னி தயாள் பாராட்டினார்.
தொடர்ந்து செல்வாவின் உற்சாகமான பாடல் நிகழ்ச்சிக்கு மேலும் விறுவிறுப்பைச் சேர்த்தது. பாடலின் இறுதிப் பகுதியில் ஸ்ரீகாந்த் தேவாவும் மேடையில் இணைந்து பாடினார். இதற்கு நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். செல்வாவின் உற்சாகத்தை கார்த்திக் பாராட்டியதுடன், தனது தந்தை அந்தப் பாடலை உருவாக்கிய சூழல் குறித்த சுவாரஸ்யமான நினைவுகளையும் ஸ்ரீகாந்த் தேவா பகிர்ந்துகொண்டார்.
கவ்யாவின் பாடலும் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தது. அவரது முகபாவனைகள், குரல் தெளிவு மற்றும் உச்சரிப்பைப் பாராட்டிய பென்னி தயாள், அவரை பாவனைகளின் அரசி ( Expression Queen ) என்று குறிப்பிட்டார். மேலும், அவருக்கு கோல்டன் பிளாஸ்ட் ( Golden Blast ) விருதும் வழங்கப்பட்டது. இதற்கிடையே கவ்யாவின் பாட்டி, கடந்த காலத்தில் தேவாவுக்காகப் பாடிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதுடன், ‘ராசாத்தி’ பாடலின் சில வரிகளையும் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்ரீகாந்த் தேவா, கார்த்திக், பென்னி தயாள் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமியா இணைந்து திடீர் இசை ஜாம் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இது தேவாவின் இசைப் பாடல்களைக் கொண்டாடிய அந்த மாலைக்கு உற்சாகமான நிறைவாக அமைந்தது.
இசை நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சியான நினைவுகள் மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்கள் என தேவாவின் இசைப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் விதமாக இந்த சிறப்பு தேவா நிகழ்ச்சி அமைந்தது.
தமிழ் ஐடல் நிகழ்ச்சியை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு சோனி விழா-வில் காணலாம். மேலும், சோனி லிவ் ( SonyLIV ) தளத்திலும் எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.

