‘உடையும் உடைக்கான உரிமையும்’ என பெண்கள் கடந்து வந்த பாதை மிகவும் வாதை நிறைந்தது. ‘இந்த உடை தான் அணிய வேண்டும்’ என்று சொன்ன காலத்திற்கு முந்தைய காலம் ஒன்றிருந்தது. அது பெண்கள் ஜாக்கெட் அணிந்தால் வரி விதிக்கப்படும் என்ற கொடுமையான காலம். 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு எதிராக இப்படியொரு சட்டமே இருந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்மிக ரீதியாகவும், பகுத்தறிவு வழியாகவும் போராடியவர் அய்யா வைகுண்டர். இந்த அங்கம்மாள் படத்தைப் பார்த்ததும் இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு டாமினேட்டிங் கிழவி கீதா கைலாசம். அவருக்கு ஜாக்கெட் அணிவது பிடிக்காது. அவரது மகன்களில் ஒருவரான வடசென்னை சரண் தன் காதலி வீட்டாரின் மதிப்பு வேண்டி அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சியின் முடிவு என்ன என்பதே இப்படத்தின் கதை. இதன் மூலக்கதை தமிழின் மிக முக்கியமான எழுத்தாளரான பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையாகும்! பெருமாள் முருகன் கதைகள் அனைத்துமே ஆழமும் அடர்த்தியும் நுட்பமும் மிகுந்தவை. அவரின் படைப்பை திரைமொழியாக்கியதிற்காகவே இயக்குநர் விபின் ராதா கிருஷ்ணனைப் பாராட்டலாம்
நடிப்பில் புதியதொரு பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார் கீதா கைலாசம். நெல்லை மாவட்டத்தின் போல்டான பாட்டி ஒருவரோடு இவரை ஈசியாக கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது. வடசென்னை சரண் இப்படத்தில் இன்னும் பலபடி மெருகேறி அசத்தியுள்ளார். நாடோடிகள் பரணிக்கு நின்று நிலைக்கக் கூடிய ஒரு கேரக்டர். புகுந்து விளையாடியுள்ளார். நாயகி முல்லையரசி, தென்றல் ரகுநாதன், உள்ளிட்ட எல்லாக் கேரக்டர்களும் நல்ல நடிப்பின் மூலமாக அங்கம்மாளுக்கு பெரு மரியாதை செய்துள்ளனர்
அஞ்சாய் சாமுவேலின் ஒளிப்பதிவு நெல்லை மாவட்டத்தின் வென்மை வளமை உள்ளிட்டவற்றை அச்சு அசலாக படம் பிடித்துள்ளது. 1999 கால கட்டத்தின் லைட்டிங்-ஐ அழகாக மேட்ச் செய்துள்ளார். முகமது முக்பூல் மன்சூரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் உயிரோட்டமாக அமைந்துள்ளது
ஒரு நல்ல சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்து, அதை ஆகத்தரமாக மேக்கிங் செய்த விதத்தில் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கிடைத்த முதல் பந்திலே சிக்ஸர் அடித்துவிட்டார். சிற்சில குறைபாடுகள் மெலிதாக படத்தில் தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்தப் படம் நல்ல நிறைவை நமக்கு பரிசளிக்கிறது. நிச்சயமாக இது தமிழில் ஒரு மாற்று சினிமா. நாம் போற்ற வேண்டிய சினிமா!
3.5/5
-வெண்பா தமிழ்

