ஆகக்கடவன- விமர்சனம்

குட்டி பட்ஜெட்டில் ஒரு கெட்டியான படம்

ஒரு படத்தின் பட்ஜெட் என்பது பணத்தில் இருப்பது போல, தரத்திலும் இருக்க வேண்டும். தமிழ்சினிமாவில் கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்கள் தரமில்லாமல் போகிறதைப் பார்க்கிறோம். சில படங்கள் மிகுந்த பொருளாதார சங்கடங்களைச் சந்தித்து வருகின்றன. ஆனால் அந்தப் படங்கள் பெரும் அதிர்வைத் தருகின்றன
. அதிலொரு படம் தான் ஆகக்கடவன

பொதுவாக நமது விமர்சனத்தில் திரில்லர் படங்கள் என்றால் கதைகளைச் சொல்வதில்லை. சிம்பிளாக படத்தின் ஒன்லைனை மட்டும் பார்க்கலாம்.

நாயகன் ஒரு நெடுஞ்சாலையில் தன் நண்பனோடு காத்திருக்கிறார். காத்திருப்பிற்கு காரணம் பைக் பஞ்சர். அவர்கள் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்குத் தெரியாமலே ஒரு ஆபத்து அவர்களுக்காக காத்திருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதே படத்தின் பரபர திரைக்கதை

கதையின் நாயகனாக ஆதிரன் சுரேஷ் இயல்பாக நடித்துள்ளார். வின்சென்ட் S தனக்கு வழங்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். CR.ராகுல், மைக்கேல், சதிஷ் ராமதாஸ், தஷ்ணா, ராஜசிவன், விஜய் ஸ்ரீநிவாஸ் உள்பட திரையில் தோன்றும் எல்லா நடிகர்களுமே கேரக்டரை உள் வாங்கி நடித்துள்ளனர்

படத்தின் பட்ஜெட் தெரியாத வண்ணம் தன் கச்சிதமான ப்ரேமிங்கால் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் லியோ V ராஜா. திரில்லர் படம் என்றால் படத்தின் மற்றொரு ஹீரோ இசை தான். அதை உணர்ந்து இசைத்துள்ளார் சாந்தன் அன்பழகன். சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ் தங்களின் ஷார்ப்பான எடிட்டிங்-ஐ கொடுத்துள்ளனர்

ஒரு நல்ல திரில்லர் படத்திற்கான இலக்கணம் பார்வையாளனை நியாயமாக சர்ப்ரைஸ் பண்ணுவது தான். அதை இப்படத்தில் சரியாக கையாண்டுள்ளனர். இடைவேளை வரையுள்ள கதை நகர்வும் சரி, பின்பாதி கதை நகர்வும் சரி, ஆடியன்ஸை நகர விடாமல் பார்த்துக்கொள்கிறது. அந்த வகையில் இயக்குநர் தர்மாவின் ரைட்டிங் அசத்துகிறது. சின்னச் சின்ன சமரசங்களைப் படத்தில் செய்துள்ளனர். வெகுசில இடங்களில் மட்டும் இன்னும் சிறப்பாக உழைத்திருக்கலாம்.

இந்த வார இறுதியில் ஒரு தரமான திரில்லர் படம் பார்க்க விருப்பம் கொண்டால், ஆகக்கடவன ஓடும் தியேட்டருக்கு போகக்கடவன
3.25/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *