மினிமம் பட்ஜெட்டில் ஒரு மிஸ்ட்ரி சினிமா
கொடைக்கானல் பூம்பாறைக்கு வனம் சார்ந்த ஒரு ஆய்வுக்காக வருகிறார் நாயகன் ரஜித் சி ஆர். அங்கு அவருக்குத் தங்குமிடத்தில் சிக்கல் என்பதால் நாயகி தீப்ஷிகா வீட்டில் ஒருநாள் தங்குகிறார். அந்த ஒருநாளில் தீப்ஷிகா காட்டும் பாசமும் நேசமும் ரஜித் சி ஆரை வேறு விதமாக யோசிக்க வைக்கிறது. ஆல்ரெடி திருமணம் ஆன தீப்ஷிகா, ரஜித் சி ஆர் செய்யும் காதல் முயற்சிக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். உடனே தனது சொந்த ஊரான கேரளாவிற்குச் செல்லும் ரஜித் சி ஆர் சில நாட்கள் கழித்து மீண்டும் தீப்ஷிகாவைத் தேடி வருகிறார். ஆனால் அங்கு பெரும் ஆச்சர்யம் காத்திருக்கிறது. அது என்ன? என்பதற்கான பதிலே மீதிப்படம்
கதையின் நாயகனான ரஜித் சி ஆர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டும் அவரது நடிப்பு பிரமாதம். நாயகி தீப்ஷிகா தரமான நடிப்பால் கவர்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், நக்ஷா சரண், விஜே பப்பு, ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலரும் எதார்த்தமாக நடித்துள்ளனர்
பிரான்சிஸின் ஒளிப்பதிவு கதையில் வரும் இருவேறு கால கட்டங்களைப் பக்காவாக பதிவு செய்துள்ளது. மாறா தனது பின்னணி இசையை கதையின் போக்கை கச்சிதமாக உணர்ந்து இசைத்துள்ளார்
இயக்குநர் வீ.ஜே மீனாட்சி சுந்தரம் ஒரு ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதையை வேறு கோணத்தில் சொல்ல முயன்றுள்ளார். முக்கியமாக முதல் பதினைந்து நிமிடம் 18+ படம் ரேஞ்சில் செல்கிறது. அதன்பின் யாரும் எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையில் வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர். தேவையற்ற காமெடி காட்சிகள், கன்வே ஆனபின்னும் நீட்டி முழக்கும் வசனங்கள் ஆகியவற்றை கத்திரித்திருக்கலாம். இன்றும் சொல்லித் தெளிய வேண்டிய கதையை எளிமையாக பதிவுசெய்துள்ள இந்தக் குட்டிப்படத்திற்கு பாராட்டுக்கள்
3/5
-வெண்பா தமிழ்

