அம்மன் பட காலம் தொட்டு இப்போது வரை பக்திப்படங்களுக்கு என ஒரு பெரும் ரசிக வட்டாரம் உண்டு. அதை குறிவைத்து வெற்றியை வீழ்த்தியுள்ளார் சுந்தர் சி
போலீஸ் கான்ஸ்டபிளான நயன்தாராவிற்கு தினமும் ஒரு கனவு வரும். அந்தக் கனவில் படைகளும் பரிவாரங்களும் வரும். கூடவே ஒரு அழைப்பும். அந்த அழைப்பு, “மயிலாஞ்சிக்கு வா” என்பதே! அதன்பின் மயிலாஞ்சிக்குச் செல்கிறது கதை. மயிலாஞ்சியில் வைத்து அரக்க இனம் உலகை தன் வசப்படுத்த முயல்கிறது. நயன்தாரா மேல் இறங்கும் மூக்குத்தி அம்மன் எப்படி உலகை காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக்கதை!
மூக்குத்தி அம்மனாக வரும்போது கதாநாயகியாகவும், கான்ஸ்டபிளாக வரும்போது கதையின் நாயகியாகவும் அசத்தியுள்ளார் நயன்தாரா. ஊர்வசி அம்மா கேரக்டரில் அழகாக பொருந்தியுள்ளார். சிற்சில காமெடி காட்சிகளில் சிரிப்பை அதிகப்படுத்தும் வேலையைச் செம்மையாகச் செய்துள்ளார். நெகட்டிவ் கேரக்டரில் வரும் ரெஜினா கஜண்ட்ராவிற்கு இந்தப்படம் வேறோர் பரிமாணத்தை வழங்கும். அவரது கணவராக வருபவரும் சிறப்பு செய்துள்ளார். யோகிபாபு வரும் காட்சிகளில் காமெடி கியாரண்டி
ஒளிப்பதிவாளர் தனது பணியை திறம்பட செய்துள்ளார். இசைஞர் ஹிப்ஹாப் ஆதி பின்னணி இசையில் பின்னியெடுத்துள்ளார். பாடல்களும் நல்ல வைப்-ஐ கொடுக்கிறது
மிகவும் எளிமையாக துவங்கும் கதை நயன்தாரா மயிலாஞ்சி சென்றதும் வேகமெடுக்கத் துவங்குகிறது. அதன்பின் தெய்வ இனம் அரக்க இனம் இரண்டுக்குமான சண்டையில் அனல் பறக்கிறது. பின்பாதி படமும் க்ளைமாக்ஸும் படத்தைக் காப்பாற்றுகிறது. நிச்சயமாக நம்பித் தியேட்டருக்குச் செல்லலாம்
3.5/5
-வெண்பா தமிழ்

