என் தலைக்குமேல் சரக்கொன்றை

புத்தகத்தின் தலைப்பு முதல் கதையாக இருந்தது. இந்திய பிரதேசத்தின் அதிக மனிதர்களால் கவனிக்கப்படாத நாகாலாந்து அஸ்ஸாம் அருகேயுள்ள நிலப்பகுதிகளில் நடக்கும் கதைகள் தான் நூலெங்கும்!

முதல் கதையில் லெண்டினா என்ற வயதான பெண்மணிக்கு ஒரு வினோத ஆசை. தன் தலைக்குமேல் சரக்கொன்றை மரம் பூத்துக்குலுங்க வேண்டும் என்பதே அந்த ஆசை. தனக்கு சொந்தமான மரமாக ஒரு மரத்தை வளர்த்து அதன் பூக்களைப்பார்க்க வேண்டும். பின் தன் கல்லறைக்கு மேல் அந்த மரம் வாழவேண்டும் என்பது அவள் விருப்பம்! அந்த விருப்பத்தை அவளது டிரைவர் பாபுவின் உதவியோடு அடைய முயல்கிறாள். அவளின் இறுதி மூச்சு வரை இந்தக் கதை நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. ம*ரணத்திற்குப் பின் தனக்கு இன்னது வேண்டும் என்ற ஆசையில் உள்ள விநோதத்தை உள்வாங்க வெகுநேரம் ஆனது! அதன்பின் எங்கள் ஊரில் சிலர் மரணத்திற்குப் பின் தன் ம*ரணம் எவ்வாறு எடுக்கப்படவேண்டும், அதன்பின் தான் எவ்வாறு நினைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதெல்லாம் நினைவுக்கு வந்தது. எங்க அப்பாமைக்கு (அப்பாவின் அம்மா) ஒரு ஆசை இருந்தது. அதை வார்த்தையாக ஒருதடவை என்கிட்ட சொன்னார். “எங்க இருந்தாலும் பேரன்பேத்திவன்னு ஒருத்தர் விடாம வந்துருங்கல. நீங்க எல்லாரும் என் மூஞ்ச கடைசியா பாக்கணும். அதுக்குப் பிறகு என்ன பொதைக்கணும். தாத்தா சா*வு தான் வறுமையில போய்ட்டு. கடவுளேன்னு நான் சா*வும்போது நீங்க எல்லாரும் நல்லா இருப்பிய. அதனால நல்லா எடுத்திருங்க” என்றார். அவர் சொல்லும்போது எனக்கு கவலையாக இருந்தது.

நான், என் அக்காகுடும்பம், என் தம்பி, எங்க அத்தைமகன் கணேசன் குடும்பம், என் சித்தப்பா மகள் மலர்விழி குடும்பம் எல்லாரும் சென்னையில் இருந்தோம். ஒருநாள் இரவு பத்துமணிக்கு ஊரிலிருந்து போன் வந்தது. “அப்பாமை போய்ட்டாவல.. எப்படியாவது வந்திருங்க” என் அம்மா பதட்டத்தோடு சொன்னார். உடனே இன்னொவா காரை எடுத்துட்டு நைட்டே கிளம்பினோம். மறுநாள் சென்றடைந்து அப்பாமை முகத்தை இறுதியாகப் பார்க்கும்போது அந்த முகம் நிறைவை எய்திருந்தது. இந்த நூலின் முதல் கதையே இப்படியொரு நினைவுவுக்குள் தள்ளிவிட்டது

ஒரு கடிதம் என்றொரு சிறுகதை! தேசத்திற்கு எதிராக, அதே சமயம் எளிய மக்களின் நல்லதிற்காக போராடும் போராட்டக்குழு ஒன்று மக்களிடம் வம்படியாக பணம் வசூலிக்கிறார்கள். அப்படி வசூலிக்கும் சூழல் கடுமை நிரம்பியதாக இருக்க, ஒரு எளிய தகப்பன் அதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். இவற்றையெல்லாம் பார்க்கும் இளைஞர் கூட்டம், வன்ம போராளிகளுக்கு எதிராக திரள்கிறார்கள். அங்கு ஒரு கடிதத்தோடு ஒரு போராளி வருகிறான். அவனை நீளக்காலன் எனும் துடிப்புமிக்க கிராம இளைஞன் சில இளைஞர்களை சேர்த்துக்கொண்டு கொன்*றுவிடுகிறான். அவன் இறந்த பின் அவன் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருக்கிறது. அந்த கடிதம் தாங்கியுள்ள செய்தி வாசிக்கும் நமது நெஞ்சை உலுக்கி விடுகிறது

நாகாலாந்து நாகர் இன மக்களின் வாழ்வும், போராட்டமும், போராட்டக்குழுவில் சிலருக்குள்ள வன்முறை வெறியும் தரமாக நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு கதைகள்.. அனைத்துமே சிறப்பு! வாசகர்கள் வாசித்து துய்க்க வேண்டும் என்பதற்காகவே மற்ற 6 கதைகளை குறிப்பிடவில்லை. எம். ஏ சுசீலா அவர்கள் தரமாக மொழி பெயர்த்துள்ளார்

இந்த நல்ல நூலைப் பரிந்துரைத்த எழுத்தாளர் வருங்கால இயக்குநர் அய்யா செந்தில் ஜெகன் நாதனுக்கு Senthil Jagannathan நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *