குழந்தைத் திருட்டுச் சம்பந்தப்பட்ட ஒரு கிரைம் ஸ்டோரி
நடிகர் அதர்வா காதல் தோல்வியால் குடிக்கு அடிக்ட் ஆகி திரிகிறார். அதனால் அவரது வீட்டில் எந்த நல்லகாரியமும் நடக்க வில்லை. நாயகி நிமிஷா சஷயனுக்கு சின்னதாக மனநல பிரச்சினை இருக்க, அதர்வாவிற்கு அவரை மணம் முடித்து வைக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் இருவரும் மகிழ்வோடு வாழ்கிறார்கள். மகிழ்ச்சிக்கு சாட்சியாக இவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் அந்தக் குழந்தையை எடுத்துவிட்டு, வேறு குழந்தையை வைத்துவிடுகிறார்கள். இது தன் குழந்தை அல்ல என்பதை நிமிஷா உணர, அவர்களின் நிஜக்குழந்தை எப்படி திருடு போனது? திருடியவர்களின் நோக்கம் என்ன? என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது
குடிக்கு அடிமையான இளைஞனாகவும், பொறுப்புள்ள கணவனாகவும், பாசமுள்ள தந்தையாகவும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார் அதர்வா. சில காட்சிகளில் இன்னுமே அவரால் நல்ல நடிப்பை வழங்கியிருக்க முடியும். ஏனோ விட்டுட்டார். படத்தை மொத்தமாக தன் நடிப்பின் வழியே தாங்கிப்பிடித்துள்ளார் நாயகி நிமிஷா சஷயன். தாய்மையின் வலியையும், இயலாமையையும் அற்புதமாக தன் நடிப்பில் கொண்டு வந்து அசத்தியுள்ளார். நண்பராக வரும் ரமேஷ்திலக், அப்பாவாக வரும் சேத்தன், மேலும் முக்கியக்கேரக்டரில் வரும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். பாலாஜி சக்திவேல் கனமான பாத்திரத்தை தனது அழகான நடிப்பால் சிறப்பாக தாங்கியுள்ளார்.
ஜிப்ரான் படத்தின் உணர்வைச் சிதைக்காத வண்ணம் பின்னணி இசையை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் எதார்த்தம் மீறாத ப்ரேமிங்கால் அசரடித்துள்ளார். க்ளைமாக்ஸுக்கு முன்பாக ஒரு சண்டைக்காட்சியில் ஒளிப்பதிவு அபாரம்
மூட நம்பிக்கையை முன்வைத்து நடத்தப்படும் குழந்தைத் திருட்டை திரைக்கதையில் சிறப்பாக கொண்டு வந்துள்ளது நெல்சன் வெங்கடேசன் மற்றும் அதிஷா எழுத்துக் கூட்டணி. திரைக்கதை வசனம் இரண்டிலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளனர். மேக்கிங்கில் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். மேலும் லாஸ்டாக வரும் ஒரு குத்துப்பாடலும் படத்திற்குத் தேவைப்படவில்லை. முன்பாதியில் வரும் காதல் தோல்வி போர்சன் பெரிய போரிங் ஏரியா. 40 நிமிடத்திற்குப் பின் தான் படம் வேகமெடுக்கிறது.
குழந்தைத் திருட்டுக்குப் பின்னால் உள்ள கொடூர காரியங்களை தோலுரித்துக் காட்டியதிலும், தாய்மையின் நம்பிக்கைக்கு மரியாதை செய்த விதத்திலும் DNA உயர்ந்து நிற்கிறது
3/5
-வெண்பா தமிழ்

