“தாழ்வுமனப்பான்மை என்ன செய்யும் என்பதை இந்நூலில் தோழர் #தொல்_திருமாவளவன் பட்டியல் இட்டிருக்கும் உண்மை முகத்தில் அறைந்தது.
தன்னைத் தானே போலி உயர்வு செய்து கொண்டால் நாம் என்னவெல்லாம் செய்வோம் என்பதை இந்நூல் விவரிக்கும் இடத்தில், பல இடங்களில் வெற்று சீன் போட்டு பொதுவெளியில் பவிசுபெற்று மனதுக்குள் வெட்கப்பட்டுக் கொண்ட அசிங்க நினைவுகள் எல்லாம் வந்து போனது.
ஒரு அமைப்பை வழி நடத்த ஒருவனுக்கு என்ன தகுதிகள் வேண்டும் என்பதை நாட்டாமை பாங்கில் சொல்லாமல் நளினமாக எதார்த்த உண்மைகளோடு சொல்லிச் செல்கிறது நூல்.
சாதியத்திற்கு எதிரான பின்னணியில் இருந்து வருபவர்களில் சாதி உணர்வு கொண்டவர்களும் இருப்பார்கள் என்பதும், சாதிவெறியில் ஊறிப்போன பின்னணி கொண்டவர்களில் சமுத்துவ எண்ணம் கொண்டவர்களும் உண்டு என்பதையும் சொன்னதோடு, ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் அதற்கான தீர்வை கண்டடையும் ஆற்றலையும் கண்முன் வைக்கிறது #அமைப்பாய்த்_திரள்வோம். நூல்
உணர்ச்சி வசப்படும் தலைமை அமைப்பைத் தடுமாறச் செய்யும் என்பதையும், அமைப்பை முன்னிறுத்தாமல் தன்னை முன்னிறுத்தும் குணத்தால் அமைப்பின் நோக்கம் எப்படியெல்லாம் திசைமாறும் என்பதையும் போட்டுத் தோலுரிக்கிறார் தோழர் திருமா!
என் சிற்றறிவுக்கு எட்டியது என்னவென்றால் இந்நூல் ஒரு அமைப்பை வழி நடத்துவோருக்கு தேவையான நூல் மட்டுமல்ல.
இங்கு எல்லோருக்குள்ளும் வேற்றுமை இருக்கிறது. கணவன் மனைவியாக இருந்தாலும் அவள் பெண் நாம் ஆண் என்ற வேற்றுமை இருக்கிறது. வேற்றுமையை மறந்து ஒற்றுமையை பேணுவதை விட, நமக்குள் இருக்கும் வேற்றுமையை அறிந்து தெரிந்து அதன்பின் புரிந்து ஒன்றிணையும் போது ஆதிக்கத்திற்கு எதிரான அமைப்பு மட்டும் அல்ல நம் அக வாழ்வுக்கு தேவையான பலமும் நமக்கு பாலமாகி விடும்.
பின்குறிப்பு:
எப்படி பா.ரஞ்சித் படம் எடுத்தால் அது சாதிப்படம் என்ற பிம்பம் உண்டாகி விட்டதோ அதேபோல் தொல்.திருமா எழுதி இருப்பதால் இந்த நூலுக்கும் ஒரு முத்திரை குத்தலாம் . ஆனால் இது முத்திரைக்கு அப்பாற்பட்டு நம் முகத்திரையை சுட்டிக்காட்டும் நூல். அவசியம் வாசியுங்கள்

