நாதுராம் கோட்சே உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்- நூல் விமர்சனம்!

🔥

“கோட்சே தூக்கிலிடப்பட்டது பெரிதல்ல.. கோட்சேவால் காந்தியை கொலை செய்ய வைத்த தத்துவம் தான் தூக்கிலிடப்படவேண்டும்” என்ற பொருளில் நூலில் ஒரு வாக்கியம் உள்ளது. எவ்வளவு உண்மை

திரேந்திர கே.ஜா எழுதி, தமிழில் இ.பா.சிந்தன் மொழிபெயர்த்துள்ள இந்த நூல் கோட்சே காந்தியை கொலை செய்ததை விட அதற்குப் பின்னாலிருந்த மதவெறியை அலசி ஆராய்ந்துள்ளது. வாழ்நாள் முழுதும் ஒருவித தாழ்வுமனப்பான்மையில் கழிந்த கோட்சேவின் வாழ்வில் மதவெறி எப்படி ஊற்றப்பட்டது? அதன் கர்த்தா யார்? என்பதை விலாவரியாக நூல் அலசியுள்ளது. ஒரு நாவலைப் போன்ற மொழிநடை என்பதால் வாசிக்க திகட்டவே இல்லை

இந்த உலகில் கடவுளை உதறிவிட்டு சண்டையிடு என்பவனையும், கடவுளை சரணாகதி அடையச் சொல்லி சண்டையிடுபவனையும், யார் கடவுள் என்று சண்டையிடுபவனையும் ஒரே தராசில் வைத்து ஆன்மிகம் வலியுறுத்தும் அன்பை பொழியச் செய்ய நினைத்தவர் காந்தி. அதனால் தான் காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களை கூட இந்திய மக்கள் சூறையாட நினைத்தார்கள். கோட்சே ஆப்தே போன்றவர்களை விஷக்கருத்து ஊற்றி வளர்த்த சாவர்க்கர் வீட்டை நொறுக்கத் துணிந்தனர் மக்கள். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற காந்தியின் முழக்கத்திற்குப் பின்னால் நின்ற கோட்சே எப்படி மதவெறியனாக மாற்றப்பட்டான்?

1818-ஆம் ஆண்டு வெள்ளையர்கள் கைகளுக்கு தேசம் போகும் முன்பாக மஹாராஷ்டிராவை ஆண்டு வருகிறார்கள் பேஷ்வாக்கள். இந்த பேஷ்வாக்கள் என்பவர்கள் போரிடும் பிராமணர்கள். ஆங்கிலேயன் வெளியே செல்வதை விட, முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டால் மஹாராஷ்டிரா மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் நமது (இந்துக்களின்) அதிகாரம் வந்துவிடும் என்பது அவர்கள் கணக்கு

அந்தக் கணக்கு சாவர்க்கர் மனதிற்குள் இறங்குகிறது. ஆங்கிலேய எதிர்ப்பு என்ற விசையில் இருந்த சாவர்க்கர் முஸ்லீம் எதிர்ப்பு என்ற திசை நோக்கிப் போகிறார். அதற்கு இந்து சாம்ராஜ்யம் என்ற காரணம் தாண்டி இரு காரணங்கள்!

1: வெள்ளையனை எதிர்த்து வன்முறை ஆட்டம் போட்டால் அவர்கள் அடக்கி ஒடுக்கிவிடுகிறார்கள். ஒரு கொலை செய்ய தூண்டியதால் அந்தமான் சிறையில் ஆங்கிலேயர்கள் சாவர்க்கரை வைத்தார்கள். அதனால் பயம்

2: மெஜாரிட்டியரான இந்துக்கள் வசம் நின்று முஸ்லீம்களை எதிர்த்தால் தானொரு மத சேவகராகவும், தன் மதத்தை சேவ் பண்ண வந்த மகான் என்றும் போற்றப்படுவோம் என்றும் நினைத்தார்.

அதனால் தன் பேச்சிலும் கருத்திலும் மதவெறியை வளர்த்தார். அந்த மதவெறி பலரை கொலைவெறி கொள்ள வைத்தது. அதில் முதன்மையானவன் கோட்சே

நாக்பூரில் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்க கருத்துக்களை கோட்சே உன்னிப்பாக கவனித்தான். ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துமகா சபை இயக்கம் விதைத்த பாடங்களையும் கோட்சே ஏற்றான். தன் வாழ்வில் கல்வி முதற்கொண்டு எதையும் உருப்படியாகச் செய்யாத கோட்சேவுக்கு தானொரு வரலாற்று நாயகனாக மாற வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அந்த வேட்கையை ஆர்.எஸ்.எஸ், சாவர்க்கர் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். மேலும் வரலாறெங்கும் கோட்சே தன்னிச்சையாக முடிவெடுத்து காந்தியைக் கொன்றான். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற ஆர்.எஸ்.எஸ் கூற்றே பேசப்படுகிறது. அதை இந்தப்புத்தகம் ஆதாரப்பூர்வமாக மறுத்துரைக்கிறது.

சோற்றில் பூசணியை மறைக்கும் வித்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சொத்து. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை அந்தக் காலத்தில் மறைத்தே வைத்துள்ளனர். யாரேனும் மாட்டிக்கொண்டால் அய்யோ அவன் ஆர்.எஸ்.எஸ் கிடையாது என்று ஒதுங்கி விடுவார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவர்களுமே அந்த மைண்ட் செட்டில் தான் இருந்துள்ளனர். உதாரணத்திற்கு , வெள்ளையர்களை எதிர்த்து காந்தி போராடிய ஒரு போராட்டத்திற்கு ஆர்.எஸ். எஸ் அமைப்பின் தலைவர் ஹெட்கேவர் தன் பதவியை துறந்துவிட்டுச் சென்றார்.

சாவர்க்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தன்னை கை கழுவிவிட்ட வலி கோட்சேவுக்கு தண்டனையை விட பெரிய வலியாக இருந்துள்ளது.

1942 வாக்கில் சாவர்க்கர் உள்ளிட்ட இந்துமகா சபை ஒரு துப்பாக்கி படையை உருவாக்க முனைந்த சம்பவங்களும், அதற்கு ஆங்கிலேய அரசு தடை போட்ட வரலாறும் பகீர் ரகம். 1929-ஆம் ஆண்டு இந்துமகா சபையின் தலைவராக இருந்த மூஞ்சே 1931-ஆம் ஆண்டு இத்தாலி முசோலினியைச் சந்தித்துப் பாசிச கருத்துக்களை கேட்டறிகிறார். ஒரு அமைப்பு வலுப்பெறவும், அந்த அமைப்பிற்கு மக்கள் அடிபணியவும் பாசிசமே பிரதானம் என்ற நோக்கில் பயணித்துள்ளது இந்து மகாசபை. தான் பிறந்த இந்து தத்துவத்தில் இப்படி கலங்கம் வந்ததே என்று காந்தி மிகவும் பயந்தார்.

காந்தியின் பயம் தான் பெரும்பான்மை மக்களின் பயம். ஆனால் அந்தப் பெரும்பான்மை தற்போது சிறுபான்மை ஆகி வரும் வேளையில் இந்த நூல் வாசிக்கப்பட வேண்டிய நூல்

இன்னும் விரிவாக எழுதலாம். அவ்வளவு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன நூலெங்கும்..Good one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *