அம்பேத்கர் வாழ்வும் உயர்வும் எத்தனையோ உயரிய சிந்தனைகளை விதைத்தாலும், “வாழ்வில் அடுத்த படியில் ஏற வேண்டுமானால் கிடைக்கும் நேரமெல்லாம் படிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை முத்தாய்ப்பாக தோன்ற வைத்தது. “உஙகளை ரிலாக்ஸ் செய்துகொள்ள என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு.. அம்பேத்கர், “அப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து மற்றொரு புத்தகத்தை வாசித்து என்னை ரிலாக்ஸ் செய்துகொள்ளுவேன்” என்கிறார். 69,000 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே தனிநபர் அம்பேத்கராகத் தான் இருப்பார். சம்பாதிப்பில் 10% புத்தகங்களுக்குச் செலவிடச் சொன்னவர் அவர். தீண்டாமையைத் திருப்பி அடிக்கவும், திமிரியெழவும் கல்வியை ஆயுதமாக கொண்ட அற்புதர்.
“வயதில் படிக்கவில்லை.. அதனால் வாழ்வெல்லாம் படிக்க வேண்டும்” என்ற வேட்கை உடைய எனக்கு, இந்த நூலில் அம்பேத்கர் குறித்த வரலாறுகளும், கட்டுரைகளும், ஆய்வுகளும் பெரும் உற்சாகத்தை தந்தது. அம்பேத்கரின் வாசிப்பு எப்படி உற்சாகத்தைத் தருகிறதோ, அதேபோல் அவர் வாழ்வில் சந்தித்த, “தீண்டாமை” பெரும் வலியை ஏற்படுத்தியது. அம்பேத்கர் பட்ட வலிகளைச் சொல்வது இனி எதற்கும் தீர்வாகாது. ஆனால் தீண்டாமை ஒழிய அம்பேத்கர் ஏற்படுத்தி வைத்துள்ள வழிகளை அறிவது அவசியம். இந்த நூலில் எத்தனையோ சம்பவங்களை நிறைய ஆளுமைகள் அழகாக பதிவு செய்துள்ளனர். மிகவும் தரமாகவும், எளிமையாகவும் அவற்றை எல்லாம் தொகுத்தளித்த, தி.முருகன், வெ.நீலகண்டன், ஷாஜன் கவிதா மூவருக்கும் கெத்தான நன்றிகள். பேருழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். நூலின் வடிவமைப்பிற்கு
பெரும் பொருட்செலவை செய்துள்ளனர்
992 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்திற்கு ₹1200 ரூபாய் குறைவு என்றே சொல்வேன்
முதல் 200 பக்கங்களில் அம்பேத்கரை பற்றிப் பிரபலங்கள் அளித்துள்ள பேட்டிகள் வருகின்றன. அத்தனையும் வொர்த்து
மிகவும் ஈர்த்த பேட்டி திருமாவளவன் அவர்களின் பேட்டியே! ஒவ்வொரு கேள்விக்கும் அவர் கொடுத்துள்ள விளக்கமும், அவற்றோடுச் சொல்லும் வரலாற்றுச் செய்திகளும் சிறப்பான வாசிப்பனுபவத்தை தந்தது.
“மஹத் குளத்தில் தலித்துகள் நீரருந்த வேண்டும் என அம்பேத்கர் போராடி 96 ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் வேங்கைவயலில், தலித்துகள் நீரருந்துவதற்கு போராட வேண்டியுள்ளது. அப்படியானால் அம்பேத்கரின் முன்னெடுப்புகளுக்கு வலிமையில்லையா?” என்பது போன்ற ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதற்கு திருமாவளவன் அவ்வளவு அழகாக பதில் அளித்துள்ளார்.
“ஒரு மனிதனின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் சாதியின் வயது 2000 ஆண்டுகளுக்கும் மேல். ஒரு போராட்டத்தால் ..ஒருத்தரின் போராட்டத்தால் மட்டும் இதைச் சரி செய்ய முடியாது. அதேநேரம் சோர்ந்தும் போய்விடக்கூடாது. “நாம் ஆதிக்க வெறியைக் காட்டினால், சிலர் எதிர்ப்புக்குரல் கொடுப்பார்கள்” என்ற எண்ணத்தை ஆதிக்க வெறியர்களுக்கு தோற்றுவித்துக் கொண்டேயிருக்க வேண்டும்” என்ற பொருள்பட திருமா பதில் அளிக்கிறார் அட்டகாசம். இந்து மதம் ஏற்படுத்தி வைத்துள்ள வர்ணாசிரம தர்மம் என்பதை முற்றாக எதிர்த்தவர் அம்பேத்கர். காந்தி, “வர்ணாசிரம முறையை ஆதரிக்காது போல ஆதரித்து, எதிர்ப்பது போல எதிர்க்கவில்லை” என்பது அம்பேத்கர் முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டு. காந்திக்கு இந்து என்ற கிளைகளில் அனைவரையும் பாகுபாடற்று அமர்த்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அம்பேத்கருக்கு, இந்து மதம் என்ற வேரிலே பிளவுவாதம் இருக்கிறது. வேர்களை வெட்டாமல் கிளைகளால் கிளர்ச்சி கொள்வது வேலைக்காகாது என்ற ஆதங்கம் இருந்தது. இந்து மதம் மட்டுமல்லாது, கிறிஸ்தவம், இஸ்லாம், பார்சி, சமணம் ஆகிய மதங்கள் மீதுமே அம்பேத்கருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. (கிறிஸ்துவ மதத்தின் மீதுள்ள குறைகளைச் சுட்டி, அம்பேத்கர் ‘the condition of convert’ என்ற நூலை எழுதியுள்ளார். அது முற்றுப்பெறவில்லை) அம்பேத்கர் முன் நிறுத்திய வர்ணாசிரம முறை எதிர்ப்பின் காரணம் என்ன? என்று ஆழமாக யோசித்தால் திருமாவளவன் தரும் விளக்கம் புரியவரும்
“Inclusion என்பது ஒருங்கிணைந்து செயல்படுவது
Exclusion என்பது
தள்ளி வைத்து செயல்படுவது. வர்ணாசிரமம் இந்துக்களை Inclusion ஆகவும், தலித்துகளை Exclusion ஆகவும் பார்க்கிறது” என்கிறார் திருமா. இங்கு தான் “இந்து மதத்தின் அடிப்படை பிளவுவாதம். அதை அகற்றாத வரை ஜாதி ஒழிவது கஷ்டம்” என்ற முடிவுக்கு வருகிறார்கள் அம்பேத்கரிஸ்ட்
காலம் முழுதும் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமே நின்ற அம்பேத்கர், எப்படி எல்லாருக்குமான தலைவர் ஆவார்? என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்கு அம்பேத்கரின் வாழ்விலே பதில் இருக்கிறது. அகமண முறையை எதிர்த்தது, , விவகாரத்துச் சட்டத்தை கொண்டு வர முனைந்தது, மின்சாரத்தை பொதுமைப்படுத்தியது, பெண்களுக்கு சொத்துரிமை வழங்க ஒற்றைக்காலில் நின்றது என அவர் அனைவருக்குமாக நின்றார் என்பது கல்மேல் எழுத்து. ஆயினும் அம்பேத்கர் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமானவர் என்பதை பலமாக கட்டமைத்தார்கள் சிலர். அதில் பெரிய அரசியல் லாபமும், உளவியல் லாபமும் பலருக்கு இருந்தது/ இருக்கிறது. இந்தக் காரணங்களை ஆராய்ந்தால் நிறைய அபத்தங்கள் வெளிப்படும்
அடுத்து பாடகர்.டி.எம் கிருஷ்ணாவின் பேட்டி மிக முக்கியமான ஒன்று.
“பிராமணக்குடும்பங்களுக்கு ஜாதியைப் பற்றிப்பேசுவதற்கான தேவை இருந்ததில்லை. என் குடும்பம், நண்பர்கள் பேச்சில் ஜாதி இருக்கும். ஆனால் ஜாதி தவறானது என்ற பேச்சு மட்டும் இருக்காது” என்று வெளிப்படையாக பேசும் கிருஷ்ணா அம்பேத்கர் பற்றிப் பேசியிருப்பவை அனைத்தும் சிறப்பாக இருந்தது
வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வீழ்த்தப்பட்டதற்குப் பின்னாலுள்ள எமோஷ்னல் அரசியலை, “சாணக்கியத்தனம்/ அயோக்கியத்தனம்” என எப்படி வேண்டுமானாலும் சொல்ல முடியும்.
வர்ணாசிரம முறையிலுள்ள பிளவுகளை, எதிர்க்கும் அம்பேத்கர் பிராமணர்களின் பரம எதிரியாகப் பார்க்கப்படுகிறார்.
அம்பேத்கரின் வாழ்வில் பிராமணர்களின் பங்களிப்பு அளப்பரியது. சவீதா அம்மையாரை அம்பேத்கர் மணந்து கொண்டதை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை . சாயாஜிராவ் என்ற பரோடா மன்னர் அம்பேத்கரின் உயர்கல்விக்கு உதவிய வரலாற்றை அம்பேத்கர் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுச் சொல்கிறார்.
“மஹாராஜா சாயாஜிராவ் என் புரவலர்; எனது வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை கட்டமைத்த வழி காட்டி” -அம்பேத்கர்
தலித் அல்லாத ஒரு பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்த நவயானா பதிப்பகத்தின் நிறுவனர் ஆனந்த், அம்பேத்கர் நூல்கள் வெளிவர அரும்பாடு பட்டவர். அவரின் நேர்காணலும் ஆகச்சிறந்த ஒன்று. அவர் மிக அழகாக ஒரு விசயத்தைச் சொல்கிறார். “ஜாதி பெருமிதம் என்பதிலிருந்து வெளி வருவது மிகவும் கடினம்” என்கிறார். எத்தனை முதிர்ச்சி இருந்தால் அவர் அந்த பெருமிதத்தில் இருந்து வெளியேறி அம்பேத்கரின் நூல்களை கொண்டு வர முடியும். தாய் மாரிலிருந்து பால் ஊட்டுவது போல், ஜாதி பெருமை சிறு வயதிலே மனதிற்குள் விஷமாக ஊட்டப்படுகிறது. அதில் இருக்கும் இன்பம் மிகவும் ஆபத்தானது. ஆனால் அது தெரியாது. அந்தப் அபாய இன்பத்தில் பலமாக உந்தப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு, பச்சைக்குத்திக் கொள்ளும் அளவிற்கு சென்றவன் நான் என்பதால், ஆனந்த் அவர்களின் கருத்திற்கு நான் உடன்படுகிறேன். என் வாழ்வின் ரியல் ஹீரோ என் தாத்தா. அவரின் உழைப்பு தந்த பாடமும், ஒரு உறவிற்கு நாம் கொடுக்கும் எமோஷ்னல் கமிட்மெண்ட்-ஐ எப்படி காலம் வரைக்கும் காப்பாற்ற வேண்டும் என்பதையும் அவர் வாழ்ந்து காட்டி பாடமெடுத்தார். Love you தாத்தோய்!
நிற்க!
அதே தாத்தா ஜாதி குறித்து எனக்குச் சரியான புரிதலைத் தரவில்லை. என் சின்ன வயதில் ஒரு சம்பவம். என் தாத்தாவிடம் சொன்னேன். “கோயில்த்தூர்ல இருந்து வந்துக்கிட்டிருந்தேன். தண்ணி தாகம் பலியா எடுத்துது தாத்தா. அந்தால .. சக்கிலியக்குடில சைக்கிள நிறுத்தி, அங்க ஒரு வீட்ல தண்ணி வாங்கி குடிச்சேன்” என்றேன். அப்போது என் தாத்தா சொன்ன வார்த்தைகள் என்னை அவர் காலத்திற்கும் பின் இழுத்தது. நல்ல காலம், என் நிகழ்காலம் கடந்தகாலத்தை அடித்து விரட்டிவிட்டது.
நவயானா பதிப்பக நிறுவனர் ஆனந்த் அவரது நேர்காணலை இப்படி முடிக்கிறார்,
“ஜாதி பிறந்து 2500 வருடங்கள் ஆகிறது. மனிதகுலம் பிறந்து 3 லட்சம் வருடமாகிறது என்கிறார்கள். ஜாதிகள் இல்லாத கடந்தகாலம் ஒன்றிருந்தது என்றால், ஜாதிகளே இல்லாத எதிர்காலமும் நிச்சயமாக உருவாக முடியும். அந்த நாளை நான் காண்பேன் என்று நம்புகிறேன்” ❤️
தனி மனித ஒழுக்கத்தில் ஒரு விடாப்பிடித் தன்மை இருந்தால் மட்டுமே அது சாத்தியம்..மது, மாது, மாமிசம் என எதுவாயினும் வேண்டாம் என்ற உறுதியை உளமாற எடுத்தால் மட்டுமே அதைச் சரியாகச் செயல்படுத்த முடியும். அந்த வகையில் மகாத்மா காந்தியின் உறுதி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரது வாழ்க்கை வரலாறான, ‘சத்தியசோதனை’ நூலில், அவரது தனிமனித கட்டுப்பாட்டுத் தன்மையை நினைத்து ஆச்சர்யப்பட்டுள்ளேன்.
அதேபோல் அம்பேத்கரும் மது அருந்தும் விசயத்தில் அவ்வளவு கறாராக இருந்துள்ளார். மருத்துவக் காரணத்திற்காக அம்பேத்கரை கொஞ்சமாக பிராந்தி குடிக்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். உறுதியாக மறுத்துவிட்டார் அம்பேத்கர். வாசிப்பால் வளர்ந்த ஞானத்தை, போராடும் வேட்கையை, சுயத்தை சிறிதுநேரம் மழுங்க வைக்கும் மது கெடுத்து விடக்கூடாது என்பதில் அம்பேத்கருக்கு பெரிய விடாப்பிடித் தன்மை இருந்துள்ளது
மார்க்சிஸ்ட்க்கும் அம்பேத்கரியத்திற்கும் உள்ள முரண்பாடு/ உடன்பாடு ஆகியவற்றை விளக்கியிருக்கும் கீதா அவர்களின் ஆய்வு அட்டகாசமான ஒன்று. கம்யூனிசம் மார்க்ஸிசம் ஆகியவற்றை ஆழமாக வாசிக்க வேண்டும் என்ற வேட்கையை அந்த ஆய்வு ஏற்படுத்தியது
அம்பேத்கர் வாழ்வில் அற்புதத்தை ஏற்படுத்திய இரண்டு பெண்களான, ரமாபாய் அம்பேத்கர், சவீதா அம்பேத்கர் இருவரைப் பற்றி கவிதா முரளிதரன் எழுதியுள்ள பதிவு சிறப்பானவைகளில் ஒன்று. எவிடென்ஸ் கதிர், மகிழ்நன் என எல்லோரும் சிறப்பான பங்களிப்பை இந்த நூலில் செய்துள்ளனர்
அம்பேத்கரின் வாழ்வும் போராட்டமும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்று தான். இந்தப் புத்தகம் அம்பேத்கரை முழுமையாக உள்வாங்க நல்ல வாசலைத் திறந்து வைத்துள்ளது
Good one

