ஊழியின் தினங்கள்- நூல் விமர்சனம்

2015 டிசம்பரில் சென்னையை சுத்தம் செய்வதாய் நினைத்து சுத்தமா செய்ய வந்த பெருமழையின் துயர நினைவுகள் கொண்ட கவிதை தொகுப்பு இது

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் சோத்துக்கு வழியில்லாமல், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் பொழக்க முடியுமா? என்ற பயத்தோடு கழிந்த அந்த இருநாட்கள் கண்முன் வந்து சென்றது. சென்ற மாதம் வீசிய இயற்கை சீற்றத்தால் ஏற்ற எல்லாத் துயரங்களையும் 2015 ஊழியின் தினங்கள் நினைவுப்படுத்தி பயமுறுத்துகின்றன. மூழ்கிய வாகனங்கள், மூச்சை நிறுத்திய மூதாட்டிகள், காப்பாற்ற ஆளில்லாமல் முகம் தாண்டி நீர் சூழும் வரை உசுரை நம்பிக்கையோடு வைத்திருந்த உயிர்கள், ஒருவாய் சோற்றுக்காக வானம் பார்த்து காத்திருந்த கரங்கள், பிரிட்ஜிக்குள் பிணமாக இருந்த தந்தை, கஷ்டப்பட்டு தந்தையின் பிணத்தை எடுப்பதற்காக மூச்சை வைத்திருந்த மகன் என அந்த ஊழியின் தின நினைவுகள் ரணம் மிகுந்தவை

“எப்போதும் ஆட்கள் நடந்து வரும் பாலத்தில் அன்று நதி நடந்து வந்தது” என்று மனுஷ்ய புத்திரன் எழுதுகிறார். அன்றைய நிலைமையில் இருந்த நீர்சூழ் நகரம் இன்றைய தினம் வரை அப்படியே இருக்கிறது! யார் குற்றம்?. நியாயமாக மனுஷ்யபுத்திரன் சென்ற மாதம் நடந்த பேரழிவை கொண்டு , 2015 ஆண்டோடு தொடர்பு படுத்தி, அரசும் அரசியலும் நீரை கையாளத் தெரியாமல் நாடாளுகிறது என்ற நோக்கில் கவிதை எழுதி புத்தகம் போட வேண்டும்!

2015-ல் பொங்கி வந்த நீரில் நிரம்பி வழிந்த கருணையை, பாசாங்கற்ற அன்பை, மதம் கடந்து நீண்ட மனிதத்தை நூலில் நீரும் கரையுமாக கறையின்றி பதிவு செய்துள்ள மனுஷின் அன்பு நெகிழ வைக்கிறது..

ஒரு ஊழிக்காலம் வந்தது கருணை கொண்டு கடந்தோம்.. இப்போது ஒரு ஊழிக்காலம் வந்தது. கருணை பெரிதாக நீளாவிட்டாலும் கடந்ததாய் நம்பி கடக்கிறோம்.. இன்னொரு ஊழிக்காலம் வந்தால்… நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *