சம்பூர்ண ராமாயணம் என்ற படம். K.V.மகாதேவன் இசை. அப்படத்தின் ஒருபாடலின் சரணத்தில்,
“கை வண்ணம் தன்னை நான் அங்கு கண்டேன்
கால் வண்ணம் தன்னை நான் இங்கு கண்டேன்
மை வண்ண எழில் மேனி
மலர்க்கண்ணா- நீ வாழி நீடூழி”
இந்த வரிகளில் முதல் இரண்டு வரிகள் கம்பருடையது. அதை அழகாக ஒரு கதை சொல்லி போல பாடலுக்குள் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார் மருதகாசி .
ராமன் தன் கையால் தாடகையை அம்பெய்து அழித்தான். தன் காலால் அகலிகையின் சாபத்தை தீர்த்தான்..அதைத்தான் கம்பன் கை வண்ணம் கால் வண்ணம் என்றிருப்பார். இந்த வரிகளுக்குள் இன்னும் சுவையான சம்பவங்கள் ராமாயணத்தில் உண்டு. இதைச் சுட்டுவது எதற்காகவென்றால், ஒரு பாடலுக்குள் மருதகாசி அவர்களின் உழைப்பைச் சொல்லத்தான். எவ்வளவு அகண்ட வாசிப்பு இருந்தால் இந்த மாதிரியான பாடல்கள் சாத்தியம்😳😳
“மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு”என்ற பாடலை எங்கள் ஊரில், ‘இது எங்கள் ஊர்க்கவிஞர் மாயவநாதன் எழுதியது’ என்று சில பெரியவர்கள் சொல்வதுண்டு. இந்தப்பாட்டில் மருதகாசி சந்தத்தோடு பெரும் பந்தமே நிகழ்த்தியிருப்பார்
“சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ணு பக்குவமா
அம்மா கையில குடுத்துப் போடு சின்னக்கண்ணு- அவங்க
ஆற நூறு ஆக்குவாங்க சின்னக்கண்ணு” என்ற வரிகளில் சொற்சுவையும் நிதர்சனமும் அள்ளுது இல்லையா!!
“அரும்பாக இருந்த நெஞ்சை
குறும்பாலே மலர வைத்து
கரும்பாக பேசிய நீ
திரும்பாத விந்தை என்ன?” என்று பிள்ளைக் கனியமுது படத்திற்காக கண்ணனை நினைத்து மருதகாசி எழுதியுள்ளார்
கண்ணனுக்கென்று சொல்லி இதைக் காதலிக்கும் சொல்லலாம்.
இந்த முதல்பாக நூலில் நிறைய காதல் பாடல்களே நிரம்பியுள்ளன. எள்ளலும் துள்ளலும் நிறைந்த காதல் பாடல்களில், எதார்த்தச் சொற்களும், இலக்கியச் சொற்களும் ததும்பி வழிகின்றன.
மறைந்த பாடலாசிரியர் பிறைசூடனிடம் ஒருமுறை, “இன்றைய பாடலாசிரியர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கவர், “கேட்க மாட்டார்கள். ஆனாலும் சொல்கிறேன். நிறைய பழைய பாடல்களை கேளுங்கள். படியுங்கள்” என்றார்.
நிச்சயமாக பழைய பாடல்களை படிப்பது மூலம், நம் திரைப்பாடல்களின் மூலத்தை அறிந்துகொண்டு வருங்காலத்தில் வளமாக எழுத முடியும்
காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த புல்வெளி காமராசன் சார் வாங்கித் தந்த இந்நூல் நல் வழியைக் காட்டியுள்ளது👌🥰

