மேல் கணக்கு- நூல் விமர்சனம்

 

வருடத்துவக்கத்தின் வாசிப்புக் கணக்கை யுகபாரதி Yuga Bharathi அண்ணனின் மேல் கணக்கிலிருந்து துவங்கியிருக்கிறேன்

ஆலயமணியில் உறங்கும் வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதையோடு ஒரு கட்டுரையை துவங்கும் அண்ணன், அதைத் தொட்டு அப்படியே சங்க இலக்கியப் பாடல்களுக்குள் செல்கிறார். சங்க இலக்கியம் தொடாத பொருளில்லை என்பதை விட, அது தொட்டிருக்கும் எவற்றுக்கும் குறைந்த மதிப்பில்லை எனலாம். என்னைப் போன்ற பெரிதாக சங்க இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்க்கே… சங்க இலக்கியங்களின் அழகும் பொருளும் பிடிபடுகிறது என்றால், அது யுகபாரதி அண்ணனின் எளிய, அதே சமயம் மயக்கும் எழுத்து நடை தான்

யானைகள் பற்றி வரும் ‘சொல்வலை வேட்டுவம்’ என்ற நெடுங்குறிப்பு அபாரமானவை. படைகளில் சிறந்தவையாக யானைப்படையை கொள்வதும், மன்னர்கள் போர்களில் யானைகளை கவர்ந்து செல்வதை பெரிதாக எண்ணுவதும் உண்டு. யானைகள் பற்றிய குறிப்புகளை அழகாக அடுக்கியபடியே வந்து, “எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா.. இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா” என்ற கண்ணதாசன் வரிகளில் அக்கட்டுரைப் பயணிக்கும் போது, இந்த நூல் நமக்கு மிகவும் நெருக்கமாகிறது.

யானைகளைக் கொன்ற அரசனை கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் என்ற புலவர் புகழ்ந்து தள்ளுகிறார். அவருக்கு பொற்தேங்காய் பரிசாக கிடைக்கிறது. இந்தக் கட்டுரையை யுகபாரதி அண்ணன் இப்படி முடிக்கிறார்

“யானைகளைக் கொன்றவனைப் புகழ்ந்த ஒரு புலவர், பொற்தேங்காயைப் பெற்றுச் சுகபோக வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார். ஆனால் அதே மரபில் வந்த இன்னொரு புலவன், ஆயிரம் கவிதைகளை எழுதி ஒரே ஒரு தேங்காயை அன்பின் நிமித்தம் கொடுத்த குற்றத்திற்காகத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் அல்லோகல்லோலப் பட்டுச் செத்திருக்கிறான். செத்தவனின் பெயர் பாரதி என்பது சின்னப் பிள்ளைக்குக்கூடத் தெரியும்” என்று முடியும் இக்கட்டுரையை கடந்து வர, சற்று நேரம் எடுக்கிறது.

“பாரதியின் சாவுக்கு யானை மட்டும் காரணம் அல்ல..அவர் வீட்டு சோத்துப்பானையும் தான் காரணம்’ என ஒருவர் எழுதியது ஏனோ நினைவுக்கு வந்தது

இப்படி நூலெங்கும், நமக்குத் தெரிந்த, தெரிந்தும் மறந்த சம்பவங்களை சங்க இலக்கியப் பாடல்களோடு தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறார். இந்த நூலுக்காக யுகபாரதி அண்ணன் போட்டிருக்கும் வாசிப்பின் உழைப்பை கண்டு வியந்து போகிறேன்

ஒன்றரை வருடங்களாக தினமும் பத்துப்பக்கங்கள் என ராமாயணம் வாசித்து வருகிறேன். இன்னும் என் வாசிப்பில் போர்ப்படலம் வரவில்லை. அதிலுள்ள ஒரு பாடலை யுகபாரதி அண்ணன் குறிப்பிட்டிருந்தார்.

கூடா ஒழுக்கத்தில் குலைந்து விட்ட ராவணன், “தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர் வயிரத் தோளை மெலிவித்தீர் வேனில் வேளை ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் தீர்ப்பித்தீர் இன்னும் என் என் செய்வித்துத் தீர்த்தீர் அம்மா” என்று சீதையிடம் கதறுகிறான்

தோல்வியையே காணாத ராவணன் சபலத்தால் வீழ்ந்து, சீதையிடம் புலம்பும் இடத்தை யுகபாரதி அண்ணன் விவரிப்பது, ராமனின் வீரத்தை விட வீரியமாக உள்ளது குறிப்பாக ராவணன் சீதையை ‘அம்மா’ என விளித்து விழும் இடம்.. தமிழ் செழித்து எழும் இடம்

இன்னும் இதுபோல் நிறைய சிறப்புகளும், திறப்புகளும் நூலில் கிடைக்கும்

நிச்சயமாக வருடத்துவக்க வாசிப்பை அழகாக துவக்கி வைத்துள்ளது மேல் கணக்கு❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *