சிறை- விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களில் ரசிகர்களை சிறை பிடிக்கப் போகும் ஒரு படம். Yes 100% வொர்த்து

சிறை காவலராக இருக்கும் விக்ரம் பிரபு, கொலை குற்றவாளியான அக்‌ஷய்குமாரை நீதிமன்ற வாய்தாவிற்காக வேலூரிலிருந்து, சிவகங்கைக்கு அழைத்துச் செல்கிறார். அக்‌ஷய் குமார் விக்ரம் பிரபுவிடமிருந்து தப்பித்து விடலாமா என யோசிக்கிறார். அதன்பின் அக்‌ஷய் குமார் தனது கதையை விக்ரம் பிரபுவிடம் விவரிக்கிறார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதிர்பாராமல் நடந்த ஒரு துர் சம்பவம் தான் அக்‌ஷயின் இந்நிலைக்கு காரணம் என்பதை விக்ரம் பிரபு உணர்கிறார். அக்‌ஷய்குமாரின் ப்ளாஸ்பேக்கில் அவரின் காதல் வாழ்வு காட்டப்படுகிறது. அந்தக் காதல் படம் முடிவதற்குள் அக்‌ஷய்குமாருக்கு கை கூட வேண்டும் என நாம் நினைக்கும் அளவிற்கு படத்தின் திரைக்கதை பரபரக்கிறது

கதாநாயகனாக விக்ரம்பிரபு! அவரின் பெருந்தன்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும். இளம் அறிமுக நடிகரான அக்‌ஷய்குமாரை கதையில் முன் நிறுத்தி நடிக்க விட்டு ரசித்துள்ளார். அறிமுக நடிகர் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் அசத்தியுள்ளார் அக்‌ஷய்குமார். நாயகி அனிஷ்மா அனில்குமார் படத்தின் பின்பாதியை கிட்டத்திட்ட தாங்கியுள்ளார். ஆனந்த தம்பிராஜாவின் நடிப்பும் மெச்சத்தகுந்த ஒன்று

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இந்தப்படத்தின் சிறப்பான அவுட்புட்டிற்கு ஜஸ்டின் பிரபாகரின் இசை முக்கியமான ஒன்று” என்றார். வெற்றிமாறனின் வார்த்தைகள் ஜஸ்டின் பிரபாகருக்கு பக்காவாக பொருந்தும். மதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்ப்திவு தரமான ஒன்று. இரவுக்காட்சிகளில் அதிக மெனக்கெட்டு நல்ல நல்ல காட்சிகளை நம் கண்களுக்கு பரிசளித்துள்ளார் ஒளிப்பதிவாளர். பிலோமின் எடிட்டிங்கில் கச்சிதமான நேர்த்தியைக் கொண்டு வந்துள்ளார்

படம் ஆரம்பித்த 5-ஆவது நிமிடத்திற்குள் இந்தச் சிறை நம்மை முழுமையாக சிறை பிடித்துவிடுகிறது. அதன்பின் படம் தரும் உணர்விலிருந்து வெளிவரவே முடியவில்லை. இஸ்லாமிய இளைஞரை 2003 கால கட்டத்தில் நம் சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அட்டகாசமான எழுத்தால் சாத்தியப்படுத்தியுள்ளார் தமிழ். தமிழின் கதையை ஆகச்சிறந்த காட்சிமொழியாக்கி ஜெயித்துள்ளார் இயக்குநர் சுரேஷ்ராஜகுமாரி. இந்தப்படம் பேசும் மனிதம் இன்றைய அவசியத்தேவை

காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தில் எளிய மக்களுக்கு கூடுமான வரை நல்லன செய்ய வேண்டும் என படம் நிறைவெய்துகிறது. அப்படியே நமது மனமும் நிறைவெய்துகிறது

சிறை- வளர்பிறை
4/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *